Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM
தமிழகத்தில் தளர்வுகற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, பழங்கள் போல மளிகை பொருட்களும் இன்றுமுதல் வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மே 15-ம் தேதி தளர்வுகள் குறைக்கப்பட்டன. தொடர்ந்து மே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.இந்த ஊரடங்குக்கான காலம் இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, இன்று காலை 6 மணி முதல் ஜூன்7-ம் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
மளிகைப் பொருட்கள்
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை பொறுத்தவரை வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம்ஆகியவற்றுடன் மளிகைப் பொருட்களையும் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தொலைபேசி மற்றும் ஆன்லைனில் ஆர்டர் பெற்று வீட்டுக்கே காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணிவரை இயங்கலாம் என்றும், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், நிதி வர்த்தக சேவைகள், செபி உள்ளிட்ட பங்கு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களுக்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றலாம். இந்த நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை பேருந்து, வேன், டெம்போ, கார்களில் மட்டுமே அழைத்து வர வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களுக்கு ஒருமாதத்துக்குள் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இப்பணிகளை மேற்கொள்ள அனுமதி இல்லை.
முந்தைய முழு ஊரடங்கில் இல்லாத வகையில், வீட்டில் இருந்து விமான நிலையம், ரயில் நிலையம் செல்லவும் அங்கிருந்து வீடு திரும்பவும் பயண விவரம், பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடியஇ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்துக்குள்ளும் தனிநபர்கள் மருத்துவ அவசரம் மற்றும் இறப்பு, இறுதிச் சடங்குக்கு செல்வதற்கு இ-பதிவு அவசியம். அதேபோல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மூலம் வருவோருக்கும் இ-பதிவு அவசியம் என்ற கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
வாகனங்கள் பறிமுதல்
இதனிடையே, நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால், காவல் துறையினரின் கட்டுப்பாடுகள் அதிகஅளவில் இருந்தன. நகரப்பகுதிகளில் ஓரளவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தாலும், அதை ஒட்டியுள்ள கிராமங்களில் வாகனங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT