Published : 30 May 2021 08:35 PM
Last Updated : 30 May 2021 08:35 PM
காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அனைத்து மகளிர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக சில ஆண்டுகள் பதவி வகித்தவர் மணிகண்டன். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர் அமைச்சராக சில ஆண்டுகள் இருந்தார். பின்னர் நீக்கப்பட்டார். கடந்த தேர்தலில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் இவர் மீது பாலியல் புகார் ஒன்றைத் துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.
சென்னை, பெசன்ட் நகரில் வசிக்கும் 36 வயது துணை நடிகை, தமிழில் 'நாடோடி' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மே 28 அன்று புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில், ''மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தார். அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக கருவைக் கலைக்கச் செய்தார்.
தற்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து மிரட்டுகிறார். அவருடன் நான் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரவச் செய்து விடுவதாக மிரட்டுகிறார். 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மணிகண்டனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''அந்தப் பெண் யாரென்றே எனக்கு தெரியாது. அவர் தரப்பில் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள்'' என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 313 (பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு), 323 ( தாக்குதல், காயம் உண்டாக்குதல்), 417 ( ஏமாற்றுதல், சீட்டிங்) 376 ( பாலியல் வன்கொடுமை), 506(1) (கொலை மிரட்டல்), 67 (IT Act) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவற்றில் சில ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் என்பதால் மணிகண்டன் முன்ஜாமீன் கோரினாலும் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT