Published : 30 May 2021 05:30 PM
Last Updated : 30 May 2021 05:30 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் முதலாவது அலகில் இதுவரை 329 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், 2-வது அலகில் சோதனை ஓட்டம் இன்று மாலை தொடங்கியது. இந்த அலகில் அடுத்த 4 முதல் 5 நாளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து தூத்துக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள முதல் அலகு பழுது பார்க்கப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது. முதல் அலகில் கடந்த 12-ம் தேதி இரவு மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால், மறுநாளே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தொடர்ந்து 6 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு கடந்த 19-ம் தேதி மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு முதலாவது அலகில் தொடர்ந்து திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து உடனுக்குடன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு வருவதால் தட்டுப்பாடு என்ற நிலை முற்றிலும் நீங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள முதலாவது அலகில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி இதுவரை மொத்தம் 329.37 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 316.2 டன் ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் பல்வேறு இடங்களுக்கு 24.6 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள 2-வது அலகிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து அந்த அலகில் கடந்த இரு வாரங்களாகப் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 2-வது அலகில் சோதனை ஓட்டம் இன்று மாலை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்து அனைத்துப் பகுதிகளும் முறையாக இயங்கினால் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் 2-வது அலகிலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2 அலகுகளிலும் முழு அளவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கினால் தினசரி சராசரியாக 70 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையில் பெரும் பகுதியைப் பூர்த்தி செய்யலாம் என அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT