Published : 30 May 2021 03:17 PM
Last Updated : 30 May 2021 03:17 PM
கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றின் கோரம் குருவிக்கூட்டைக் கலைப்பதுபோல் பல குடும்பங்களைக் கலைத்துச் சிதைத்துள்ளது. குடும்பத்தின் ஆதாரமாக இருந்து உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
* கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.
* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
* இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே ஏற்றிடும்.
* கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.
* ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும்.
* அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வருமாறு:
“கரோனா தொற்று காரணமாகப் பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக முதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட தமிழக முதல்வருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT