Published : 30 May 2021 02:32 PM
Last Updated : 30 May 2021 02:32 PM

பிபிஇ உடை அணிந்து கரோனா வார்டில் நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

கோவை

கோவையில் ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிபிஇ கவச உடை அணிந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின் கடுமையாக உயர்ந்து வந்தது. மே மாதம் உச்சத்தைத் தொட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மே 7ஆம் தேதி பதவி ஏற்றது. ஸ்டாலின் முதல்வர் ஆனார்.

முதல் கையெழுத்தாக ரூ.4000 கரோனா நிவாரண நிதியாக அறிவித்தார். தொடர்ந்து தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிப்பு, கரோனா தடுப்பு மருந்துகள் வாங்குவது என அரசு முயற்சி எடுத்து வருகிறது. அரசின் முதற்பணி கரோனா தடுப்புப் பணி மட்டுமே என மாவட்ட வாரியாக அமைச்சர்களுக்கு, ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பொறுப்பு கொடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு எடுத்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது என கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியை முடுக்கி வருகிறார். இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது.

இதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கவனம் செலுத்த அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டுள்ளார். இன்று கோவைக்கு நேரில் சென்ற அவர் ஆய்வு நடத்தினார். கோவையில் கார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நேரில் ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்கள் அணியும் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிந்து கரோனா நோயாளிகள் வார்டுக்குச் சென்று ஆய்வு செய்தார், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். முதல்வரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x