Last Updated : 30 May, 2021 01:46 PM

 

Published : 30 May 2021 01:46 PM
Last Updated : 30 May 2021 01:46 PM

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கரோனா புறநோயாளிகள் பிரிவு வேறு இடங்களுக்கு மாற்றம்: ஆட்சியர் தகவல்

ஆட்சியர் எஸ்.நாகராஜன் | கோப்புப் படம்.

கோவை

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கரோனா புறநோயாளிகள் பிரிவு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கரோனா நோயாளிகளுக்குத் தாமதமின்றி விரைவாக சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கோவை அரசு மருத்துவமனையின் 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு (Covid casualty)கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கரோனா நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை வழங்குவதற்கும், ஆக்சிஜன் வழங்குவதற்கும் 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு 2 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்ம ஆக்சிஜன் டேங்க் மற்றும் 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர கிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இங்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.

குறைந்த அளவு ஆக்சிஜன் தேவை உள்ள நோயாளிகளுக்காக மேலும் 100 படுக்கைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை அரசு மருத்துவமனையின் கரோனா புறநோயாளிகள் பிரிவு (Covid screening centre) அருகில் உள்ள புனித பிரான்சிஸ் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிர அறிகுறிகள் ஏதுமில்லாத கரோனா நோயாளிகள் நேரடியாக அங்கு சென்று எக்ஸ்-ரே, ரத்தப் பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், கரோனா சிகிச்சை மையத்துக்குச் செல்லவும் பரிந்துரை, அனுமதி இங்கு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ள நோயாளிகளை அரசு மருத்துவமனைகள் அல்லது ஆக்சிஜன் வசதி கொண்ட மையங்களில் சேர்ப்பதற்கும் இங்கேயே வழிவகை செய்யப்படும்.

இதேபோல, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கரோனா புறநோயாளிகள் பிரிவு வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அதே வளாகத்தில் செயல்படும். இவை அனைத்தும் நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும்''.

இவ்வாறு ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x