Published : 30 May 2021 01:50 PM
Last Updated : 30 May 2021 01:50 PM
போர்க்குணமும் - துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியைத் தமிழ்நாடும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும் என மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவருமான மைதிலி சிவராமனின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்ணுரிமைப் போராளியான அவர் - முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்திலும் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன் - ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் - உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்து ஒரு புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர்.
கீழவெண்மணி துயரத்தை - அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து - நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை "Hunted by Fire" என்ற புத்தகமாக வெளிவந்து - இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் போராடி - அம்மக்களுக்கு நீதி கிடைத்திட இரவு பகலாக உழைத்தவர். பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும் - அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமன் குரல்தான் இருக்கும்!
போர்க்குணமும் - துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழ்நாடும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும். மைதிலி சிவராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும்- அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT