Published : 30 May 2021 11:00 AM
Last Updated : 30 May 2021 11:00 AM
ஏற்றுமதி நிறுவனங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்திருப்பது கரோனா பெருகுவதற்கே வழி வகுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது; பெரிய தொழிற்சாலைகளையும் மூடத் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தளர்வுகள் அல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையிலான இந்த முடிவு மிகவும் ஆபத்தானது.
இந்தியாவிலேயே தினசரி கரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இது நிச்சயமாக பெருமைப்படுவதற்கான விஷயமல்ல. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத மிகவும் ஆபத்தான சூழலில்தான் நாம் இருக்கிறோம். தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ள போதிலும், அது மனநிறைவளிக்கும் வகையில் இல்லை. தினசரி கரோனா தொற்று ஒருசில மாவட்டங்களில் குறைந்தால், வேறு சில மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் கூட கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தினமும் 500, 600 என்ற அளவில் இருந்தது. ஆனால், குறையும்போது 28ஆம் தேதி 17, 29ஆம் தேதி 57 என்ற அளவில்தான் குறைந்து கொண்டிருக்கின்றன. இது அடுத்தடுத்த நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கரோனா பரவல் விஷயத்தில் தமிழ்நாடு இன்னும் ஆபத்தான காலகட்டத்தைத் தாண்டவில்லை. இத்தகைய சூழலில் அவசர, அவசரமாக ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதித்தது ஏன்? எனத் தெரியவில்லை. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட இதுகுறித்து விவாதிக்கப்படாத நிலையில், இந்த அரிய யோசனையை யார் வழங்கியது? என்றும் தெரியவில்லை. கரோனாவை ஒழிப்பதற்காக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடி வரும் நிலையில், அதைச் சீர்குலைக்கும் வகையில் இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவறு.
அனைத்து வகையான ஏற்றுமதி நிறுவனங்களிலும் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை பணியாற்றுவார்கள். அவர்களில் 50% பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் கூட பணியிடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. அதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கினால், அவை கரோனா பரப்பும் மையங்களாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். ஏற்றுமதி நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் மீண்டும் பணியாற்றும் இடத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும். அது கரோனா பரவலை விரைவுபடுத்தும். இப்படிப்பட்டதொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு அரசு முயலக்கூடாது.
அத்தியாவசிய சேவைகள், தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் ஏராளமான ஆலைகள் முழு ஊரடங்கு காலத்திலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகளில் மிக அதிக அளவில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்த ஆலைகளில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக ஹூண்டாய், ரெனால்ட் நிசான், என்ஃபீல்டு ஆகிய தொழிற்சாலைகள் கடந்த சில நாட்களில் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்திகள் தமிழக அரசுக்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்தும் கூட ஏற்றுமதி நிறுவனங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்திருப்பது கரோனா பெருகுவதற்கே வழி வகுக்கும்.
கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததற்கு அங்கு தொழிற்சாலைகள் செயல்படுவதுதான் காரணம் என்று மருத்துவத் துறை அமைச்சர் கூறியுள்ளார். தொழிற்சாலைகள் இயங்குவதால் பரவும் கரோனா, ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதாலும் பரவும் என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள், வேதனைகள், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவற்றால்தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். அதை சில அவசர முடிவுகளால் சீர்குலைத்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் கரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது; பெரிய தொழிற்சாலைகளையும் மூடத் தமிழக அரசு ஆணையிட வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT