Last Updated : 29 May, 2021 07:32 PM

1  

Published : 29 May 2021 07:32 PM
Last Updated : 29 May 2021 07:32 PM

தாய், தந்தை, பாட்டியின் உயிரைப் பறித்த கரோனா: ஆதரவற்ற நிலையில் அரசு உதவியை எதிர்நோக்கும் சிறுவர்கள்

உயிரிழந்த தன்ராஜ், ஜெயந்தி.

கோவை

கோவையில் தாய், தந்தை, பாட்டி என அடுத்தடுத்து மூன்று உறவுகளை கரோனாவால் பறிகொடுத்த சிறுவர்கள் அரசு உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியில் வசித்து வந்தவர் தன்ராஜ் (45). அப்பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (40). இவர்களது மூத்த மகன் விபின் ஜெயராஜ் (15) பத்தாம் வகுப்பும், இளைய மகன் சாமுவேல் எபினேசர் (8) மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில், தன்ராஜுக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தன்ராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் 17-ம் தேதி உயிரிழந்தார். ஜெயந்திக்கு கரோனா பாதிப்பின்போது மருத்துவமனையில் உதவி செய்த அவரது தாய் பத்மாதுரை (59), 23-ம் தேதி உயிரிழந்தார். இவ்வாறு தாய், தந்தை, பாட்டி என அடுத்தடுத்து மூன்று உயிர்களை இழந்த சிறுவர்கள் தற்போது தன்ராஜின் தாய் சாரதாவின் அரவணைப்பில் உள்ளனர்.

இதுகுறித்து சாரதா கூறும்போது, “தொற்று பாதிக்கப்பட்ட பிறகு தன்ராஜும், ஜெயந்தியும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். ஆக்சிஜன் அளவு குறைந்துவந்த நிலையில் கடைசியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஒரு இடம் கிடைத்தது. அதில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், தன்ராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. வீட்டிலேயே இருந்தான். பின்னர், அரசு மருத்துவமனையில் தாமதமாக இடம் கிடைத்தது. அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளில் உயிரிழந்துவிட்டான். இருவருக்கும் படுக்கை கிடைக்காமல் 4 நாட்கள் அலைந்தோம். ஒருவேளை உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் இருவரும் பிழைத்திருப்பார்கள்.

எனது கணவரின் பென்ஷன் பணத்தை வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறேன். ஆனால், அதை வைத்து வாடகை அளித்து, பேரன்களைக் கவனித்துக்கொண்டு, இதர செலவுகளையும் மேற்கொள்வது கடினம். எனவே, எங்களுக்கு அரசு உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x