Published : 29 May 2021 06:41 PM
Last Updated : 29 May 2021 06:41 PM
அடுத்த இரண்டு தினங்களுக்குத் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''வெப்பச் சலனம் காரணமாக மே 29 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 30 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன் 2 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
அடுத்த இரண்டு தினங்களுக்குத் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மே 29, 30 ஆகிய தேதிகளில் குமரிக் கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மே 29, 30 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மே 29 முதல் 31 வரை கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மே 29 முதல் 32 வரை தென்மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT