Published : 29 May 2021 06:34 PM
Last Updated : 29 May 2021 06:34 PM
ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளுக்கு உணவு வழங்க முதற்கட்டமாக சுமார் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அரிசி, நாய் உலர் தீவனம், குதிரை தீவனம், பால் பவுடர் ஆகியவற்றை இன்று விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு (TNAWB) தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 15 நாட்களுக்கு 1000க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''கரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளுக்கு (நாய்கள், பூனைகள், குதிரைகள் போன்றவை) உணவு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளின் துன்பத்தைத் தணிக்க, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர விலங்கு நல அமைப்புகள், தனி நபர்கள் மூலம் சென்னை பெருநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்விலங்குகளுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை மூலம் ஆதரவற்ற நாய்கள், பூனைகள், குதிரைகளுக்குத் தேவைப்படும் தீவனப் பொருட்களைக் கொள்முதல் செய்து விலங்குகள் நல அமைப்பின் மூலம் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக சுமார் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அரிசி- 1250 கிலோ, நாய் உலர் தீவனம்- 220 கிலோ, 525 கிலோ குதிரைகளுக்கான தீவனம், ஆவின் நிறுவனத்தின் மூலம் 625 கிலோ பால் பவுடர் முதலானவை இன்று கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநரால் மேற்கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு (TNAWB) வழங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 15 நாட்களுக்கு 1000க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும்.
கரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT