Published : 29 May 2021 12:42 PM
Last Updated : 29 May 2021 12:42 PM

கல்வியாளர் ஆனந்தக்கிருஷ்ணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் தலைசிறந்த கல்வியாளருமான ஆனந்தக்கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மக்களவை எம்.பி. கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கல்வியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தலைசிறந்த கல்வியாளருமான ஆனந்தக்கிருஷ்ணன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

ஆனந்தக்கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக எம்.பி. கனிமொழி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமாக இருந்தவர்: ஸ்டாலின் இரங்கல்

வாணியம்பாடியில் பிறந்து இந்தத் தரணி போற்றும் வகையில் நேர்மையான, அறிவுக்கூர்மை மிகுந்த கல்வித்தொண்டாற்றிய ஆனந்தக்கிருஷ்ணன் மாணவ சமுதாயத்தின் கலங்கரை விளக்கம். கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராக இருந்த அவரைக் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார். வெளிப்படைத்தன்மை மிகுந்த நிர்வாகம், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் ஆகிய இரண்டையும் தனது இரு கண்கள் போல் கருதிப் பணியாற்றிய அவர், திமுக ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமாக இருந்தவர்.

ஆனந்தக்கிருஷ்ணன் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும் - மருத்துவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற, நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் நன்கு உணருவர். அதுமட்டுமின்றி- அவர் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி நடைபெறுவதற்கான முதல்வரின் ஆலோசகராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.

அர்த்தமிகுந்த, அறிவுசார்ந்த கல்விக் கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சு வரை பயணித்த கல்வியாளரை இழந்திருப்பது, கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

பாமக கல்விக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர்: ராமதாஸ் இரங்கல்

பாமக சார்பில் நடத்தப்பட்ட கல்வி சார்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர். டி.எம்.ஏ பாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாத சூழல் ஏற்பட்டபோது, அதை மாற்றுவதற்காக பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட மாதிரிச் சட்டத்தைத் தயாரித்த குழுவில் முனைவர் ஆனந்தக்கிருஷ்ணனும் இடம் பெற்றிருந்தார். அந்த மாதிரிச் சட்டம்தான் பின்னாளில் 93ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்படுவதற்கும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்தது.

முனைவர் ஆனந்தக்கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி பெரிதும் மதித்த மனிதர்: கனிமொழி இரங்கல்

பேராசிரியர் ஆனந்தக்கிருஷ்ணன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமூகத்தை மேம்படுத்தும் வழியாகவும், சமுக நீதிக்கான பாதையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். கருணாநிதி பெரிதும் மதித்த மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துரைத்தவர்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை இரங்கல்

மிகச் சிறந்த கல்வி ஆளுமையாகத் திகழ்ந்த ஆனந்தக்கிருஷ்ணன், தேசியக் கல்விக் கொள்கை 2020 முன்வைக்கும் ஆபத்தான நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். இவர் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவின் வலுவான பரிந்துரையின் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. கல்வித் தளத்தில் மிகப் பெரும் சவால்களை மக்கள் சந்திக்க வேண்டிய சூழலில் அவரின் மறைவு மிகப் பெரிய இழப்பு.

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x