Published : 29 May 2021 11:44 AM
Last Updated : 29 May 2021 11:44 AM

தொகுதி நிதியில் தடுப்பூசி வேண்டுகோள்; மத்திய அமைச்சரின் பதில் வருத்தமளிக்கிறது: சு.வெங்கடேசன் 

சென்னை

மக்கள் பணியில் ஈடுபடும் இளைஞர்கள் 30 ஆயிரம் பேருக்குத் தொகுதி நிதியில் தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சரிடம் வைத்த வேண்டுகோளைப் பல்வேறு காரணங்கள் கூறி நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடந்த 13ஆம் தேதி நான் கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். அதற்கு சுகாதாரத்துறைச் செயலாளர் இப்பொழுது பதில் அனுப்பியுள்ளார்.

எனது கடிதத்தில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 30,000 இளைஞர்களை கோவிட் எதிர்ப்புக் களத்தில் தன்னார்வத் தொண்டர்களாக ஈடுபடுத்தத் திடடமிட்டிருப்பதையும், அவர்களுக்குக் களத்திற்குச் செல்ல ஏதுவாகத் தடுப்பூசி போடுவதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்குவதாகவும், அதற்கான தடுப்பூசிகளை அளித்து உதவுமாறும் கோரியிருந்தேன்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ந்த முன்முயற்சிகள், 24×7 களத்தில் இருந்து தாமதமின்றி பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனை அனுமதி, ஆக்சிஜன் அளிப்பு, மருந்து கிடைத்தல் ஆகியனவற்றை உறுதி செய்தல் போன்ற பணிகளில் நான் ஈடுபட்டு வருவதை எல்லோரும் அறிவர்.

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதமும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கோவிட் எதிர்ப்புக் களத்தில் நாங்கள் ஆற்றுகிற பணியையும், அளிக்கிற ஒத்துழைப்பையும் பாராட்டியே தொடங்கியுள்ளது.

இந்தக் கள அனுபவத்தில் இருந்தே அனுபவம் மிக்க பலரையும் கலந்தாலோசித்து "சமூகப் பங்கேற்பை" (Community Participation) உறுதி செய்கிற வகையில்தான் ஒரு நேர்த்தியான திட்டமிடலை முன்வைத்தேன். குடியிருப்புப் பகுதியில் முதியோர் பராமரிப்பு, கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு உதவி, அவசர மருத்துவத் தேவைகளுக்கு வாகனம், தனிமைப்படுத்தப்பட்டவர்க்கு உணவு ஏற்பாடு போன்றவற்றிற்கு இந்தத் தன்னார்வ இளைஞர்கள் பெரும் பங்களிப்பைத் தர இயலும்.

இளைஞர்களின் ஆற்றல் நேர்மறையாகப் பயன்படும். இவ்வளவு கனவுகளோடு முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு சுகாதாரத்துறைச் செயலாளர் தந்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

"விலை தாராளமயம் மற்றும் கோவிட்-19 தேசிய தடுப்பூசி பரவல் திட்டத்தை" குறிப்பிட்டு நேரடியாக தடுப்பூசியைத் தர இயலாது எனத் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்குமே தருவதற்கே அக்கொள்கையில் வழிவகை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வகுத்துள்ள தடுப்பூசிக் கொள்கையை அதன் விலை நிர்ணய முறையை அடிப்படையிலேயே நாங்கள் ஏற்கவில்லை. மூன்று விலை, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை, தனியார்களின் நேரடி கொள்முதல் ஆகியனவெல்லாம் ஒரு பேரிடர் காலத்தில் மக்கள் நலன் நாடும் அரசாங்கம் செய்யத்தக்க செயல்கள் அல்ல.

எல்லோருக்கும் இலவசத் தடுப்பூசி, காப்புரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு, உற்பத்தியை 'கட்டாய உரிமம்' வாயிலாக விரிவுபடுத்துவது, பட்ஜெட் ஒதுக்கீடான ரூ. 35,000 கோடியை முழுமையாகப் பயன்படுத்துவது, பி.எம்.கேர்ஸ் நிதியைத் திருப்பி விடுவது உள்ளிட்ட பல கருத்துகளை நானும், எனது கட்சியும், எதிர்க்கட்சிகளும், நிபுணர்களும் முன்வைத்து வருகிறோம்.

ஆனால், அதற்கெல்லாம் உரிய நடவடிக்கை இல்லை. மக்களின் உயிர் வாதை உலுக்குகிற வேளையில் கூட உலக மயப் பாதையை விட்டு விலகமாட்டேன் என்கிற அரசின் நிலைப்பாடு ஆழ்ந்த வேதனை தருகிறது.

நிரந்தர நீண்டகாலத் தீர்வுகளுக்கும் அரசின் கதவுகளும், காதுகளும் திறக்காது. உடனடி களத் தேவைகளுக்கும் திறக்காது என்றால் என்ன செய்வது? மதுரை கோவிட் எதிர்ப்புக் களத்திற்கு நான் முன்மொழிந்துள்ள திட்டம் தடுப்பூசி கொள்கையையும் கடந்தது. விரிந்த வியூகத்தின் ஒரு பகுதி. நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் முன்மாதிரியாய் அமலாக்கி பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யலாம் என்ற திறந்த மனதோடு அணுகப்பட வேண்டிய ஆலோசனை.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் மத்திய அரசு நிதியின் ஒரு பகுதிதான் என்ற எளிய உண்மையைக் கூட மேற்கண்ட கடிதம் கணக்கில் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

தனியார்கள் கூட நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்குத் தடுப்பூசியைச் சிறப்பு ஒதுக்கீடு செய்யமாட்டோம் என்பதைப் போன்ற மக்கள் விரோதச் செயல் வேறெதுவுமில்லை. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். கொள்கையில் மாற்றம் கொண்டு வாருங்கள். நல்ல முடிவை நானும் எனது தொகுதி மக்களும் எதிர் பார்க்கிறோம்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x