Published : 28 May 2021 08:08 PM
Last Updated : 28 May 2021 08:08 PM
தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன், மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை நேருஜி கலையரங்கம், கூடங்குளம் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, கள்ளிகுளம் பனிமய மாதா ஆலயம், ராதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனாவை அறவே ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தமிழகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து தற்போது கிராமப்புறங்களிலும் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.
ராதாபுரம், வள்ளியூர் வட்டாரங்களில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ள முகாம்கள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
நோயில்லா மாவட்டமாக திருநெல்வேலியையும், நோயில்லா மாநிலமாக தமிழகத்தையும் உருவாக்க அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வள்ளியூர், ராதாபுரம் வட்டாரங்களில் தற்போது கரோனா பாதிப்பு அதிகமுள்ளதை மாவட்ட நிர்வாகம் தெரிந்துகொண்டு, இங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. வள்ளியூரில் யூனிவர்சல் கல்லூரியில் 200 படுக்கைகள், மன்னார்புரம் விலக்கிலிருந்து திசையன்விளை செல்லும் சாலையில் புனித அந்தோனியார் பிஎட் கல்லூரியில் 200 படுக்கைகளுடன் இரு கரோனா சிகிச்சை மையங்கள் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும். நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லை என்ற நிலையையும் அரசு உருவாக்கி வருகிறது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT