Published : 28 May 2021 07:51 PM
Last Updated : 28 May 2021 07:51 PM
கோவிட் தடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 30,000 முதல் குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு:
“உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 பெருந்தொற்று என அறிவித்தது. அண்மைக்காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை பரவிய பிறகு சுகாதாரப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் காய்ச்சல் மற்றும் நோய்த் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் கடுமையாகப் பணியாற்றி வருகிறார்கள்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளில் நேரடியாகத் தொழிலாளர்களுடன் இத்தொடர் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் தொடர்புடைய பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காலம் முறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கீழ்க்கண்டவாறு ஊக்கத்தொகை வழங்க அரசால் முடிவெடுக்கப்பட்டு அவ்வாறு ஆணையிடப்படுகிறது.
* ஆங்கில மருத்துவர்கள் மற்றும் இந்திய முறை (ஆயுஷ்) மருத்துவர்கள் 30,000 ரூபாய்.
* முதுநிலை மருத்துவ மாணவர்கள் 20,000 ரூபாய்.
* பயிற்சி மருத்துவர்கள் 15,000 ரூபாய்.
* செவிலியர்கள் 20,000 ரூபாய்.
* கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர், 108 அவசர ஊர்தி பணியாளர்கள், 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் அவருக்கு இணையான பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 15,000 ரூபாய்.
* புற ஆதார முறையில் பணி அமர்த்தப்பட்ட மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 15,000 ரூபாய்.
* அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சிடி ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், அவற்றுக்கான சிகிச்சை மற்றும் சிகிச்சை சார்ந்த பணியாளர்கள், கரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை மாதிரி சேகரிப்பு மையங்கள், நுண்ணுயிரியல், ஆர்டிபிசிஆர் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிபவர்கள், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நேரடியாகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுவரும் தகுதி வாய்ந்த நபர்களை இனம்கண்டு மேலே சொல்லப்பட்டுள்ள நிதித் தொகுப்பு வழங்க அந்தந்தத் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்படுகிறது”.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT