Published : 28 May 2021 07:38 PM
Last Updated : 28 May 2021 07:38 PM
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக அமைக்கப்பட உள்ள 250 படுக்கைகளுக்கு, ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் (ஆட்சியர் பொறுப்பு) தெரிவித்தார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது ஐசியூ மற்றும் ஆக்சிஜன் கொண்ட 675 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பலர் தவித்து வந்தனர். மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாகத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், கரோனா தொற்று எண்ணிக்கை எந்த நேரத்திலும் அதிகமாகும் என்பதால் அதற்கு ஏற்ப தற்காலிகக் கூடாரம் அமைத்து சிகிச்சை அளிக்கும் வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இதற்காகத் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆம்பூர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சுமார் 1,000 படுக்கைகளைக் கூடுதலாக ஏற்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2 தற்காலிகக் கூடாரங்கள், ஒரு தேர்வுக் கட்டுப்பாட்டு அறை வளாகம் என மூன்று இடங்களில் சுமார் 250 கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இந்தப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் இன்று (மே 28) ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.9.75 லட்சம் மதிப்பில் 125 கிலோ எடையுள்ள துணிகளைத் துவைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட அறையையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வி உடனிருந்தார்.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கூறும்போது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு தற்காலிகக் கூடாரத்தில் 145 படுக்கைகள், மற்றொரு கூடாரத்தில் 45 படுக்கைகள், கட்டிட அறை ஒன்றில் 60 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும். படுக்கைகள் தயாராக உள்ள நிலையில் மின்வசதி அளிக்கும் பணி, நகரும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும் பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகள ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
ஓரிரு நாளில் இந்தப் பணிகள் முடிவடைய உள்ளன. தமிழக அரசிடம் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 300- 400 வரையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வரப்பெறும் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோகக் கட்டமைப்பு வசதி உள்ளது. தற்போதைய நிலையில் இது போதுமானதாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT