Published : 28 May 2021 05:58 PM
Last Updated : 28 May 2021 05:58 PM
சென்னை வர்த்தக மையத்தில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் 504 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ள இரண்டாவது பிரிவினை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 800 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மொத்தம் 864 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் 07.05.2021 அன்று சென்னை வர்த்தக மையத்திற்கு நேரடியாகச் சென்று ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 360 படுக்கைகள் கொண்ட முதல் பிரிவு உடனடியாகத் தொடங்கப்பட்டது. இந்த முதல் பிரிவில் மொத்தமுள்ள 360 படுக்கைகளில் 300 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இம்மையத்தில் 11.05.2021 அன்று முதல் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தற்பொழுது கோவிட் தொற்று பாதித்த 256 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
வர்த்தக மையத்தில் 2-வது பிரிவில் 504 படுக்கைகளுடன் கோவிட் சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. இதில், 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை மையத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, குறைந்த அளவு ஆக்சிஜன் இணைப்புடன் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நபர்கள் மருத்துவமனையின் அறிவுறுத்தலின்படி இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பொது மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி அல்லது மாநகராட்சியின் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் (Screening Centre) உள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்புக் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சேமிப்புக் கலன்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
இம்மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் விலையில்லாமல் தரமான உணவு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கோவிட் சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT