Published : 28 May 2021 05:01 PM
Last Updated : 28 May 2021 05:01 PM
கரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்கள் அழுகி வீணாகின்றன.
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், இலஞ்சி சுற்றுவட்டார பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாமிபுரம், சங்கரன்கோவில், தென்காசி பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மலர்களை விற்பனை செய்கின்றனர். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருவிழாக்கள் தடைபட்டுள்ளன.
மேலும், திருமண விழாக்களும் மிகவும் எளிய முறையில் நடைபெறுகின்றன. இதனால், பூக்களுக்கான தேவை குறைந்துவிட்டது.
மலர்கள் விற்பனையாகாததால் அவற்றை அறுவடை செய்யாமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர். இதனால், செடிகளிலேயே மலர்கள் அழுகி வீணாகின்றன. சில விவசாயிகள் மலர்களை பறித்து, விவசாய நிலங்களிலேயே செடிகளுக்கு உரமாக்கிவிடுகின்றனர். வருமானம் கிடைக்காததால் மலர் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் களையெடுத்தல் போன்ற பணிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. விவசாய நிலங்களும் களைகளால் சூழப்பட்டுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “திருமணம், துக்க நிகழ்ச்சி போன்றவற்றுக்கு மட்டும் குறைவான மலர்களையே வியாபாரிகள் வாங்குகின்றனர். தேவைக்கு போக எஞ்சியுள்ள மலர்கள் வீணாகின்றன. காய்கறி சாகுபடி செய்த விவசாயிகளை விட மலர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டும் கரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டாவது பாதிப்பில் இருந்து மீளலாம் என நம்பியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பாதிக்கப்பட்டுள்ளோம். கடுமையான நஷ்டத்துக்கு ஆளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT