Published : 28 May 2021 05:15 PM
Last Updated : 28 May 2021 05:15 PM
தமிழக காவல்துறையில் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன பதவி உயர்வு, முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியாக உள்ளது. எஸ்.பி.க்கள் தொடங்கி ஐஜிக்கள் அளவிலான அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வர உள்ளது.
தமிழக காவல் துறையில் அதிகாரிகளுக்குக் கடந்த ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இடையில் கரோனா தொற்று, தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் பதவி உயர்வு தள்ளிப்போனது. காவல் துறைக்கு 4 கட்டமைப்புகள் மூலம் காவலர்கள், அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நேரடியாக காவல்துறைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குரூப்-1 தேர்வு மூலம் டிஎஸ்பிக்கள் (உதவி ஆணையர்கள்) காவல்துறைக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தேர்வாகின்றனர். இதுவல்லாமல் யூபிஎஸ்சி சிவில் தேர்வு மூலம் நேரடியாக ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். இதில் இரண்டாம் நிலைக் காவலர் அதிகபட்சமாக ஆய்வாளர் வரை தமது பணிக்காலத்தில் வர இயலும், உதவி ஆய்வாளர் கூடுதல் டிஎஸ்பி, சிலர் எஸ்.பி. அளவு வரை பணியாற்றி ஓய்வு பெறுவார்கள்.
குரூப்-1 அலுவலர்கள் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் கன்ஃபர்டு ஐபிஎஸ் எனப்படும் ஐபிஎஸ் அதிகாரியாக நிலை உயர்த்தப்படுவர். அதிகபட்சமாக குரூப் -1 அதிகாரிகள் ஐஜி அந்தஸ்து வரை வந்து ஓய்வு பெறுவார்கள்.
வெகுசிலர் ஏடிஜிபி வரை பதவி வகித்து ஓய்வு பெறுவார்கள். தற்போதுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளில் அவர்கள் பணிக்கு இணைந்த காலத்தை வைத்துப் பதவி உயர்வு அளிக்கப்படும். ஐபிஎஸ் முடித்து பயிற்சி எஸ்.பி.யாகப் பதவியில் இணையும் அதிகாரி எஸ்.பி., டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி எனத் தனது காலத்தில் பதவியில் இருப்பார். டிஜிபிக்கள் பலர் இருந்தாலும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி (தற்போது HOPF) உயர்ந்த அந்தஸ்து உள்ள பதவி.
இந்நிலையில் காவல் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு கோப்பு முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாளில் முறைப்படி பதவி உயர்வும், அதை ஒட்டிப் பணியிடமாற்றமும் அறிவிக்கப்பட உள்ளது.
பதவி உயர்வு பட்டியலில் உள்ள அதிகாரிகள் யார் யார்?
ஐஜியிலிருந்து ஏடிஜிபியாக பதவி உயர்வுக்குக் காத்திருப்போர்:
1. கே.ஷங்கர், 96 பேட்ச் அதிகாரி
2. அமல்ராஜ், 96 பேட்ச் அதிகாரி
3. ஜெயராமன், 96 பேட்ச் அதிகாரி
டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்வு பெறுவோர்
1. அமித்குமார் சிங் (அயல் பணி), 2003 பேட்ச் அதிகாரி
2. அஸ்வின் கோட்னிஸ் (அயல் பணி), 2003 பேட்ச் அதிகாரி
3. பாலகிருஷ்ணன், 2003 பேட்ச் அதிகாரி
4. பிரதீப்குமார், 2003 பேட்ச் அதிகாரி
5. சுதாகர், 2003 பேட்ச் அதிகாரி
எஸ்.பி.யிலிருந்து டிஐஜியாகப் பதவி உயர்வு பெறும் அதிகாரிகள்
1. எ.சரவணன், 2007 பேட்ச் அதிகாரி
2. சேவியர் தன்ராஜ், 2007 பேட்ச் அதிகாரி
3. பிரவேஷ் குமார், 2007 பேட்ச் அதிகாரி
4. அனில்குமார் கிரி, 2007 பேட்ச் அதிகாரி
5. பிரபாகரன், 2007 பேட்ச் அதிகாரி
6. கயல்விழி, 2007 பேட்ச் அதிகாரி
7. ஆர்.சின்னச்சாமி, 2007 பேட்ச் அதிகாரி.
தற்போது எஸ்.பி.யிலிருந்து, ஐஜி வரையிலான பதவி உயர்வு மட்டுமே வெளியாக உள்ளது. ஏடிஜிபியிலிருந்து டிஜிபியாகப் பதவி உயர்வுக்காக 5 அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் அல்லது ஜனவரியில் பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT