Published : 28 May 2021 05:03 PM
Last Updated : 28 May 2021 05:03 PM
யாஸ் புயலால் நெல் சாகுபடி செய்ய விதை நெல் வழங்குவதோடு, மீண்டும் நெல் சாகுபடி செய்ய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 28) வெளியிட்ட அறிக்கை:
"வங்கக் கடலில் உருவான 'யாஸ்' புயல் ஒடிசாவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. சூறைக் காற்று காரணமாக, நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் பெயர்ந்தும், முறிந்தும் விழுந்தன.
தொடர் மழை காரணமாக, கோதையாறு, குழித்துறை தாமிரபரணி மற்றும் வள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குளச்சல் குறும்பனை, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் பன்றிவாய்க்கால் கரைபுரண்டோடுவதால் தென்னந்தோப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நாகர்கோவில் புத்தேரி, நெடுங்குளத்திற்குத் தண்ணீர் வரும் வளாவடி கால்வாயில் கீழ புத்தேரி பகுதியில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும், நடவு செய்யப்பட்டிருந்த 10 ஏக்கர் நெல் வயல்களுக்குச் சேதம் ஏற்பட்டது. பறக்கைப் பத்து பகுதியில் நடவு செய்யப்பட்ட 60 ஏக்கர் நெல் வயலிலும் தண்ணீர் சூழ்ந்து பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. குளச்சல் பகுதியில் பெய்து வரும் மழையால், ஏவிஎம் கால்வாய் கரையோரம் உள்ள மீனவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து 151 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், முக்கடல் அணை நிரம்பி வாழைத் தோட்டங்களிலும், தென்னந்தோப்புகளிலும் வெள்ள நீர் தேங்கி சேதம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒக்கிப் புயலின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் இன்னும் மீளாத நிலையில், யாஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒக்கிப் புயலில் ஏற்பட்ட பயிர்ச் சேதத்துக்கு முந்தைய அதிமுக அரசு இழப்பீடு தரவில்லை. எனினும், யாஸ் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் இழப்பீட்டைக் கோருவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கடும் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல் சாகுபடி செய்த பயிர்களெல்லாம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர் மழையால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன. மீண்டும் நெல் சாகுபடி செய்ய விதை நெல் வழங்குவதோடு மீண்டும் நெல் சாகுபடி செய்ய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.
கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.விஜயதரணி ஆகியோர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, கன்னியாகுமரியே வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்கும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் விரைந்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT