Published : 28 May 2021 03:32 PM
Last Updated : 28 May 2021 03:32 PM
தமிழகத்தில் கரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை இல்லாமல் மரணமடைந்ததாக எந்த புகாரும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைக் கண்காணிக்க உத்தரவிடக் கோரி திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், “கரோனா தொற்று பாதித்தபோது, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சையின்போது எந்த மருத்துவரும், செவிலியரும் கரோனா வார்டுக்கு வரவில்லை. இதே நிலை நீடித்தால் கரோனாவிற்கு பலியாவதை விட, மருத்துவர்கள், செவிலியர்கள் அஜாக்கிரதையால் பலியாகி விடுவர்.
முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஏற்கெனவே கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருவதாகவும், இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
படுக்கை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆரம்பத்தில் குறைவாக இருந்தபோதும், தற்போது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், சிகிச்சையில்லாமல் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்தார் என எந்த புகாரும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT