Published : 28 May 2021 03:43 PM
Last Updated : 28 May 2021 03:43 PM
4 மகன்கள், மருமகள் கரோனா பாதிப்பால் இறந்ததை அறிந்த தாயார் அதிர்ச்சியில் மரணமடைந்தார். இந்நிலையில், குன்னத்தூரில் மனநல மருத்துவ முகாம் நடத்தப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளியைச் சேர்ந்தவர் நடராஜ் என்பவரின் மகன் தெய்வராஜ் (42). கடந்த மாதம், கோவையில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து அவர் கரோனா பாதிப்புக்குள்ளாகி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்து, இவரது மனைவி சாந்தி (35), தெய்வராஜின் மூத்த சகோதரர்கள் தங்கராஜ் (52), ராஜா (50), சவுந்தரராஜன் (45) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனா பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சகோதரர்களின் தாயார் பாப்பாளுக்கு (70) மகன்கள் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. வயது மூப்பு காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் குடும்பத்தில் யாரும் சொல்லவில்லை. கடந்த 26-ம் தேதி தனது மகன்கள் மற்றும் மருமகள் யாரும் வராததால் உறவினர்களிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அனைவரும் கரோனா தொற்றால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கவே, மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அன்று நள்ளிரவு உடல்நிலை மோசமாகி, உயிரிழந்தார்.
மேலும், அதே பகுதியில் தறித் தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி (40), தனது தம்பி செந்தில்குமார் (38) மற்றும் தாய் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். செந்தில்குமார் கரோனாவால் உயிரிழந்த நிலையில், ஈஸ்வரமூர்த்திக்கும் தொற்று உறுதியாகி உயிரிழந்தார். இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்துத் தொற்றுக்கு உயிரிழந்ததால், அங்கு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ''எங்கள் கிராமத்தில் 1,500 குழந்தைகள் உட்பட சுமார் 6,000 பேர் வாழ்கிறோம். தற்போது இரு குடும்பங்களிலும் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், ஒட்டுமொத்த கிராமமே கரோனா தொற்று பயத்தில் உறைந்துள்ளது.
இத்தனை உயிரிழப்புகளால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊரின் பிரதான சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், வீதிகள் அடைக்கப்படவில்லை. நிலைமை கட்டுக்குள் வரும் வரை, வெளிநடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போதுதான், பலர் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்க்க முடியும்.
மனநல மருத்துவ முகாம் தேவை
கடந்த வாரம் அனைவருக்கும் பரிசோதனை செய்ததில், எங்கள் கிராமத்தில் தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தொடங்கி, தீவிர அறிகுறிகளுடன் பலரும் இருந்துள்ளனர். சுகாதார நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே கிராமத்தில் வாழும் பலரின் எதிர்பார்ப்பு. இத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணமான கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தால்தான் மக்களின் மன அழுத்தத்துக்குத் தீர்வு கிடைக்கும்.
அதேபோல் தற்போது மக்களின் மனதில் குடியேறியுள்ள பயத்தை அகற்றும் வகையில், விரைவில் மனநல மருத்துவ முகாம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சுகாதாரத்துறையினர் கூறும்போது, ''மே மாதத்தில் மட்டும் 57 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்குப் பிறகு நடந்த மூன்று பரிசோதனை முகாம்களில், 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை அடைத்தாலும், மக்கள் அதனை உடைத்துக்கொண்டு உள்ளே செல்கின்றனர். இதனால் தொற்றின் தீவிரம் குறையாமல் உள்ளது. சமூக இடைவெளியுடன் மனநல மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களிடம் பேசி உரிய முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT