Published : 28 May 2021 02:13 PM
Last Updated : 28 May 2021 02:13 PM
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (மே 28) வெளியிட்ட அறிக்கை:
"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல் காவிரியில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, தமிழக அரசு கூறுவது வருத்தம் அளிக்கிறது.
கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பு காரணமாக, மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.
ஆனாலும், தன்னிச்சையாக அணை கட்டும் பணியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு ஆணையிட்டிருக்கிறது.
பசுமை தீர்ப்பாயத்தின் இந்நடவடிக்கையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை தொடர்பான வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன்பாக, அதுகுறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
நீர்வளத்துறையில் நீண்ட அனுபவமும், வல்லமையும் கொண்ட அமைச்சர் துரைமுருகன் இப்படிப் பேசியிருப்பாரா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால், இதுபற்றிய செய்திகள் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியிலும் வெளியாகியிருப்பதால் துரைமுருகன் கூறியிருப்பதை உண்மை என்று நம்ப வேண்டியுள்ளது.
மேகதாது அணை குறித்த சிக்கல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு எழுந்தபோதே, அதைத் தமிழக அரசு அனுமதிக்காது என, அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதுதான் பாமகவின் நிலைப்பாடும் ஆகும்.
மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் திறம்பட நடத்துவதும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து புதிய அணைக்கு அனுமதி வழங்காமல் தடுப்பதும்தான் இப்போதைக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய பணியாகும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேசுவதற்கு எதுவும் இல்லை எனும்போது, அந்த அரசுடன் இதுபற்றிப் பேசுவது அவசியமற்றது.
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்குதான் பாதிப்பு ஏற்படும். 1970-களில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக, சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால், நமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.
அக்காலத்தில்தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே, கபினி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகள் கட்டப்பட்டன; காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது. இப்போது கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்தச் சிக்கலில் நாம் நமது உரிமைகளை இழக்க நேரிடும்.
இன்னும் கேட்டால், மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழகத்துடன் பேச கர்நாடகம் துடித்துக் கொண்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மேகதாது அணை குறித்து தமிழ்நாடு - கர்நாடகா அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதையேற்று இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதியளித்தார். அப்போதே அதை பாமக கடுமையாக எதிர்த்தது. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
மேகதாது அணை விவகாரம் குறித்து, கர்நாடகத்துடன் பேசுவது நமது உரிமைகளை இழக்கவும், சமரசம் செய்து கொள்வதற்கும் மட்டுமே வழிவகுக்கும். எனவே, மேகதாது குறித்து கர்நாடகத்துடன் தமிழக அரசு எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. மாறாக, மேகதாது அணை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் திறம்பட நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT