Published : 28 May 2021 12:52 PM
Last Updated : 28 May 2021 12:52 PM
தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் கடந்த 2 நாட்களுக்கு முன் 2,53,000 பேர் ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். நேற்று முன்தினம் 2,84,000 பேர் போட்டுக்கொண்டார்கள். நேற்று அது 3 லட்சத்தைக் கடந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஓமந்தூராரில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
“மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். அதற்காகத்தான் முதல்வர் மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியும், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நேரில் சென்றும் ஆய்வு நடத்தினார். அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவால் தொற்றின் வேகம் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைக் குறைப்பதற்காக அமைச்சர்களை, சுகாதாரத் துறைச் செயலரை அங்கு அனுப்பி 18 வயது முதல் 45 வயதுள்ளோருக்கான தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும், தொற்றின் அளவைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்துவரவும் அறிவுறுத்தினார்.
அந்த வகையில் கடந்த 3 நாட்களில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகாசி, தேனி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், அனைத்து சேவைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினோம்.
அதனால் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி பணியில் சிறப்பாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் கடந்த 2 நாட்களுக்கு முன் 2,53,000 பேர் ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். நேற்று முன்தினம் 2,84,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். நேற்று அது 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இந்த வயதினர் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். முதல்வர் அதற்கான தீர்வு காணும் பணியில், அதற்காக அதிகாரிகளை முடுக்கிவிடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். அதனால் தொற்று எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT