Published : 28 May 2021 12:34 PM
Last Updated : 28 May 2021 12:34 PM
பாலியல் தொல்லை விவகாரத்தில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரை அடுத்து, சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், வகுப்பில் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்குச் சென்றதாகவும், மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரைப் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், அதேபோல முன்னாள் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சென்னையில் உள்ள அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஆனந்த் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அவர் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஆசிரியர் ஆனந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்கள் மூலமும் இ-மெயில் மூலமாகவும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் நடைபெறும். அக்குழு விரைவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
ஆசிரியர் ஆனந்த் மே 26-ம் தேதி அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுடன் எவ்விதத்திலும் தொடர்புகொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.
எங்களின் சொந்தக் குழந்தைகளாகக் கருதும் மாணவர்களின் நலனும் பாதுகாப்புமே எங்களுக்கு முக்கியம். அவர்கள் மீது நிகழ்த்தப்படும் எந்தவிதமான வன்முறை, அத்துமீறல், தவறான நடத்தை ஆகியவற்றை எப்போதும் சகித்துக்கொள்ள மாட்டோம். கல்விக்காகவும் மாணவர்களுக்காகவுமே நாங்கள் இருக்கிறோம். முன்னாள் மாணவர்களாக இருந்தாலும் அவர்களும் எங்களுக்கு முக்கியமானவர்களே'' என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT