Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM
பாலியல் தொந்தரவுகள், பணி அழுத்தங்களைத் தவிர்க்க பள்ளிகளின் இணையதள வகுப்பு செயல்பாடுகளை மத்திய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தனியார், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரம் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஓரண்டாக இணையவழியில்தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேரடி வகுப்புகளுக்கு சாத்தியங்கள் இல்லாத சூழலில், இணையவழியிலான கற்பித்தல் முறை பெரும் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மத்திய இடைநிலைக் கல்விவாரியத்தின் (சிபிஎஸ்இ)கீழ் இயங்கக்கூடிய பள்ளிகள் இணைய வழியில்தான் பாடங்கள் மற்றும் தேர்வுகளை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, சென்னை கே.கே. நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணைய வகுப்புகளில் மாணவிகளின்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதேசமயம், மாணவிகள் மட்டுமின்றி, தாங்களும் பணிச்சுமை, பாலியல் தொந்தரவுகள் என தொடர் மன அழுத்தங்களை அனுபவித்து வருவதாக சில தனியார் பள்ளி ஆசிரியைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிஆசிரியைகள் சிலர் கூறும்போது, “கரோனா பரவல் சூழலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே இணையவழிக் கற்பித்தலை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வரு கின்றன. அதேநேரம், தங்கள் பள்ளிதான் சிறப்பான ஆன்லைன் கல்வியைக் கொடுக்கிறது என்று காட்டும் போட்டி மனப்பான்மையுடன், சில பள்ளி நிர்வாகங்கள் சங்கடமான நிர்பந்தங்களை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, ஆரம்ப வகுப்புக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியைகள் இத்தகு நிர்பந்தங்களால் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆடியும், பாடியும்...
உதாரணமாக, நேரடியாக வகுப்பு நடத்தும்போது செய்வதுபோலவே, ஆன்லைனிலும் கேமரா முன்பு தங்கள் முழு உருவமும் தெரியும்படி நின்று, ஆடியும், பாடியும் வகுப்பு நடத்துமாறு பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். சில ஆசிரியைகளிடம் ‘இன்னும் நன்றாக குதித்து, சுழன்று ஆடியபடி பாடுங்கள்’ என்றெல்லாம் பள்ளியில் இருந்து கண்டிப்புடன் கூறுகிறார்கள்.
குழந்தைகள் மட்டுமே இருக்கும் வகுப்பறைக்குள் சுதந்திரமாக ஆடிப் பாடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், வீட்டில் உள்ள ஆண்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, எவ்வாறு அப்படி செய்ய முடியும்?
ஏற்கெனவே கரோனாவால் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இத்துடன், கல்விக் கட்டண வசூல், மாணவர் சேர்க்கை சம்பிரதாயங்கள் போன்ற நிர்வாகப் பணிகளிலும் எங்களை ஈடுபடுத்துகிறார்கள். தினமும் 8 முதல் 10 மணி நேரம் பள்ளி வேலைகளுக்காக செலவிட வேண்டியுள்ளது.
ஊதியக்குறைப்பு, பணிச்சுமை, வேலை நிரந்தரமின்மை என பல்வேறுசிரமங்களுக்கு இடையே, ஆன்லைன் வகுப்புகளின்போது வேறு சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆன்லைனில் அமர்ந்து பாடம் கேட்கும் குழந்தையின் அருகில், சரிவர ஆடை உடுத்தாத ஆண்கள் வந்து அமர்வது, பின்புலத்தில் நின்றபடியே, உணர்ந்தோ, உணராமலோ ஆடை மாற்றிக் கொள்வது போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் உள்ள இடப்பற்றாக்குறை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், சிலர் வேண்டுமென்றே செய்வதையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
பெற்றோரைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதைக் கூறவில்லை. இதுபோன்ற சிக்கல்களையும் பள்ளிநிர்வாகங்கள் யோசித்து, பெற்றோருக்கு கண்டிப்பான சில அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
அத்துமீறி பேசும் ஆண்கள்
பாடம் நடத்துவதற்காக ஆசிரியைகள் பயன்படுத்தும் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் சில ஆண்கள், `சிறந்த முறையில் பாடம் நடத்துகிறீர்கள்’ என்று பாராட்டுவதுபோல ஆரம்பித்து, அத்துமீறி பேசுவதையும், ‘சாட்’ செய்வதையும் குறிப்பிடும் சில ஆசிரியைகள், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தால்,சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கண்டிப்பதில்லை என்றும் வருந்துகிறார்கள். ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், ‘பெற்றோர் ஆலோசனைக் கூட்டங்களின்போது நேரில் எச்சரிக்கலாம்’ என்று சொல்லி தள்ளிப்போடுவதாகவும் கூறு கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் கூறும்போது, “இந்த விவகாரம் சார்பாகபெற்றோருக்கு பள்ளிகள் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், ஒருசில பெற்றோர்முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை. சிறிய வீடு, குழந்தைகளின் கல்விசெயல்பாடுகள் கண்காணிப்பு, எதார்த்தமாக பேசியது என தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் நேரடி கற்பித்தல் முறையில் இருந்த நிம்மதியும், சுதந்திரமும் தற்போது ஆசிரியைகளுக்கு இல்லை என்பது உண்மை.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இணைய வகுப்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகங்களும் வகுப்புகளை கண்காணித்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இருதரப்பு பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம். அதேபோல, பெற்றோரும், ஆசிரியர்களும் சுய ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும்” என்றார்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘இணையதள வகுப்புகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பெற்றோருக்கு முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறி சிலர் தவறு செய்யும்போது, புகார்கள் கிடைக்கப் பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கிறோம்.
மேலும், மாணவர்கள் வீடுகளில் பாடங்களை கவனிக்கும்போது கவனம் சிதறவும் வாய்ப்புகள் உள்ளன. அதை தவிர்க்கவே, பாடல், யோகா உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, பாடம்நடத்த வலியுறுத்துகிறோம். எனவே, இந்த பணிகளை சிரமமாகப் பார்க்காமல், ஆசிரியர்கள் சவாலாக ஏற்று செய்ய வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT