Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்களின் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு முதற் கட்டமாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 60 வயதுக்கு அதிகமானவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி முகாம்கள் மூலம் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டது.
ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரிய அளவில் ஆர்வம் இல்லாத நிலை இருந்தது. கரோனா இரண்டாம் அலை பாதிப்பின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் விரும்பினர்.
அதேநேரம், தடுப்பூசி மீதான சந்தேகம் மற்றும் எதிர் வினைகள் குறித்த அச்சத்தால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி மீது ஆர்வம் காட்டவில்லை. நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் தடுப்பூசிக்கு ஆதரவு குறைய ஆரம்பித்தது. இது அரசின் தடுப்பூசி திட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தடுப்பூசி தட்டுப்பாடு
தமிழகத்துக்கான கரோனா தடுப்பூசி இந்த மாதத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்தது. இதனால், பல இடங்களில் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வந்தாலும் தடுப்பூசி இல்லாத நிலை இருந்தது. இதற்கு அடுத்தடுத்த நாட்களில் தடுப்பூசி விநியோகம் முறைப்படுத்தப்பட்டது. அதேபோல், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி மாவட்ட அளவில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதற்காக, மாவட்டங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இளைஞர்களிடம் ஆர்வம்
கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இளை ஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. முதல் நாளில் சிறப்பு முகாமில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற முகாம்களில் 18-44 வயதுக்குள் 428 பேரும், 45-60 வயதுக்குள் 118 பேரும், 60 வயதுக்கு மேல் 49 பேர் என மொத்தம் 595 பேர்தான் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
கடந்த 25-ம் தேதி 18-44 வயதுக்குள் 1,386 பேருக்கும், 45-60 வயதுக்குள் 159 பேரும், 60 வயதுக்கு மேல் 67 பேருக்கும் என மொத்தம் 1,612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் சுமார் 5,200-க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 18-44 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி 550 பேரும், 25-ம் தேதியன்று 1,420 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று மட்டும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வேலூரில் 2 லட்சத்தை கடந்தது
வேலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 30- ஆக இருந்தது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 1 லட்சத்து 55 ஆயிரத்து 390 என்றும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 48,640 பேர் போட்டுள்ளனர். இவர்களில் கோவிஷீல்ட் தடுப்பூசியை 1 லட்சத்து 55 ஆயிரத்து 6 பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 49,024 பேரும் போட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 71,044 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 56,393 பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 13,668 பேரும் போட்டுள்ளனர். ஆண்கள் 33,561 பேரும், பெண்கள் 23,809 பேர் ஆகும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியை 61,550 பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 9,494 பேரும் போட்டுள்ளனர். மாவட்டத்தில் 60 வயதுக்கு மேல் 13,728 பேரும், 45-60 வயதுக்குள் 26,054 பேரும், 18-44 வயதுக்குள் 17,591 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
‘‘பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க அரசியல் கட்சி தலைவர் கள் மூலம் தொலைக்காட்சிகளில் அதிகமுறை ஒளிபரப்ப வேண்டும். கிராமப்புறங்களில் திட்டமிட்டு மருத்துவ குழுவினரை பாதுகாப்பு வசதிகளுடன் அமர்த்தி தடுப்பூசி முகாமை அதிகளவில் நடத்த வேண்டும்’’ என சிஎம்சி முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT