Published : 27 May 2021 08:04 PM
Last Updated : 27 May 2021 08:04 PM
லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கமல் இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கை:
"பிரபுல் படேல் லட்சத்தீவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோதச் சட்டங்களாக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதே இச்சூழலுக்குக் காரணம்.
எல்டிஏ மசோதா பூர்வகுடிகளின் வாழ்விடங்களைப் பறிக்கும் அபாயம் இருப்பதால், பழங்குடியின மக்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். பாசா சட்டம் தம் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் குரலை ஒடுக்கும் அடக்குமுறை சட்டமாக இருக்கிறது.
லட்சத்தீவு பகுதியில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுகளில் அசைவ உணவு இடம் பெறாது எனும் அறிவிப்பு உள்நோக்கம் உடையது. மாட்டிறைச்சி பயன்பாட்டிலும் அரசின் தலையீடு இருக்குமோ எனும் முஸ்லிம்களின் அச்சம் நியாயமானது.
இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளவர்களின் குடும்பத்திலிருந்து கிராம பஞ்சாயத்துகளில் உறுப்பினராகவோ, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது எனும் மசோதாவும் ஜனநாயகத்திற்கு எதிரானது.
கரோனா தடுப்பு நடவடிக்கையிலும் பிரபுல் படேலின் நிர்வாகம் சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு கரோனா தொற்றே இல்லாத தீவில் முன்யோசனை இன்றி கட்டவிழ்த்து விடப்பட்ட தளர்வுகள் இன்று உயிர்களைக் காவு வாங்குகின்றன.
புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவின் அழகையும், சுற்றுச்சூழலையும், மக்களின் உரிமைகளையும் ஒரு சேர அழிப்பதாக உள்ளது. லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...