Published : 27 May 2021 07:44 PM
Last Updated : 27 May 2021 07:44 PM

கரோனா தொற்று தடுப்பு விவகாரத்தில் அரசின் நண்பனாக செயல்படுகிறோம்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை

கரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளில் தமிழக அரசுக்கு உதவியாக செயல்படுவதாகவும், உயர் நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்பதால் அரசை நடத்த முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்க்கான லைசோசோமால் மருந்து ஒதுக்கீடு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு தவிர்த்து, சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

நர்சிங் மாணவிகளும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இணைத்துக் கொண்ட வழக்கறிஞர்கள், கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாகவும், மனநல காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் கரோனா சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், கரோனா பாதித்து பலியானவர்களின் உடல்களை முழுவதுமாக மூடி விடுவதால் உறவினர்களால் அவர்களின் முகத்தைப் பார்க்க முடிவதில்லை என்பதால் முகம் மட்டும் தெரியும் வகையில் கொடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, தமிழக அரசின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவே செயல்படுவதாகவும், நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியல்ல என்றும் நீதிமன்றம் அரசை நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

பின்னர், கரோனாவில் பலியானவர்களின் உடலுக்கு அடக்கம் செய்வதற்கு முன்பு உறவினர்கள் இறுதியாக பார்ப்பதற்கும், உடலை அடையாளம் காண்பதற்கும் ஏதுவாக முகம் மட்டும் தெரியும் வகையில் பொதிய வேண்டுமென அறிவுறுத்தினர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறைந்துள்ளது குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த அதிகமானோர் ஊரடங்கை மீறி புதுசேரிக்குள் நுழைவது மற்றும் புதுச்சேரி ஆரோவில் உள்ளே இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிப்பதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை புதுச்சேரி அரசு கவனத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தி வழக்கு விசாரணையை மே 31 ஆம் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x