Published : 27 May 2021 06:59 PM
Last Updated : 27 May 2021 06:59 PM
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் 5-ம் இடத்துக்குள் இருப்பதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 27) நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வரவேற்றார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்து பேசியதாவது:
"திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலை வந்த போது 7,633 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது 2-வது அலையில் இதுவரை 12,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில், தினந்தோறும் 2,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுவரை 6 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் 5-ம் இடத்துக்குள் உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்காக 4,411 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 382 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாகும். தற்போது, 4,332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆம்பூர், புத்துக்கோயில், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பூசி மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காரணம் தடுப்பூசி மட்டுமே பெருந்தொற்றில் இருந்து மனித உயிர்களை காக்கும் ஆயுதமாகும்.
உலகில் வளர்ந்த நாடுகளில் கூட கரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோய் தொற்று விரைவாக குணமாகிறது. சித்த மருத்துவ முறையை அரசு ஊக்குவித்து வருவதால் தமிழகத்தில் நிறைய இடங்களில் சித்த மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா குறித்த விழிப்புணர்வும், தடுப்பூசியால் ஏற்படும் நன்மை குறித்து மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் போய் சேர வேண்டும். அதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் சிறப்பாக செயல்படுவதால், இங்கு 4 இடங்களில் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ மையத்தில் சுமார் 350 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் அரசு கவனமுடன் செயலாற்றி வருகிறது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் திலீபன் குடும்பத்தினர் சார்பில், ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்காக அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), அண்ணாதுரை (தி.மலை), சட்டப்பேரவை உறுப்பினர் நல்லநம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT