Published : 27 May 2021 02:49 PM
Last Updated : 27 May 2021 02:49 PM
பொதுமக்களிடம் ஆர்வம் ஏற்பட்டால் மட்டுமே தடுப்பூசி போடும் இலக்கு முழுமை பெறும் என, வாணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல் அலையை காட்டிலும் 2-ம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தடுப்பூசியை ஆர்வமாக போட தொடங்கினர். ஆனால், இடையில் ஒரு சில வதந்திகள் பரவியதால், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது.
அதேநேரத்தில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்களிடம் இருந்த சிறிதளவு ஆர்வமும் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை பாதியானது.
இந்நிலையில், தமிழகத்தில் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து அதன் மூலம் உயிரிழப்பு சம்பவங்களும், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படும் நிகழ்வுகளைக் கண்டதும் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தியது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்புறங்களில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் முன் வந்தாலும் ஊரகப்பகுதிகளில் தடுப்பூசி மீது இருந்த ஒரு வித அச்ச உணர்வு கிராமப்புற மக்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. இதனால், கிராமப்புறங்களில் தடுப்பூசி மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகாவையொட்டியுள்ள கிராமப்புறங்களில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும், 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட வாணியம்பாடியில் 5 சதவீதம் கூட தடுப்பூசி போடப்படவில்லை என, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தெரிவித்தார்.
இது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் மருத்துவர் பசுபதி கூறுகையில், "கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்று தான் நமக்கு கிடைத்த பெரிய வரம். தடுப்பூசி கண்டுபிடித்த உடன் மக்களுக்கு செலுத்தப்படவில்லை. பல கட்ட ஆய்வுக்குப் பிறகே அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெரிய பாதிப்பில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இலவசமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது என்பதை போல இலவசமாக போடப்படும் உயிர்காக்கும் மருந்தான கரோனா தடுப்பூசிக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. தடுப்பூசியை போட்டுக்கொள்ள கிராம மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி அருகே தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். வாணியம்பாடி சுகாதாரத்துறை சார்பில் விவசாயிகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வழங்கியும், 15 நபர்களுக்கு மேல் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. இதனால், எங்களின் உழைப்பு வீணானது.
தடுப்பூசி செலுத்த வரும்படி பலமுறை அறிவுறுத்தியும், விவசாயிகள் தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது, நீரிழிவு நோய் உள்ளது, ஆஸ்துமா பிரச்சினை, இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன், நான் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என, பல காரணங்களை கூறி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வரவில்லை.
கரோனா என்ற அரக்கனிடம் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்று தான் நமக்கான பெரிய ஆயுதம் எனக்கூறியும் விவசாயிகளும், வியாபாரிகளும் அதை ஏற்பதாக இல்லை. பொதுமக்களிடம் ஆர்வம் இருந்தால் மட்டுமே தடுப்பூசிக்கான இலக்கை நம்மால் எட்ட முடியும். அரசு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அது கிராமப்புற மக்களை சென்று சேரவில்லை என்பதே உண்மை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT