Published : 26 May 2021 09:29 PM
Last Updated : 26 May 2021 09:29 PM
கோவை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை, விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 3,200-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர். அதேபோல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,070-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது, மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட, மொத்தம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிந்து, தொற்றுப் பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுகாதாரத் துறையினருடன் இணைந்து தினமும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் தொற்று அறிகுறி உள்ள மக்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முடிவுகளைத் தாமதமாகத் தெரிவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விரைவாக வெளியிட வேண்டும்
இது தொடர்பாக பொதுமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘ மருத்துவ முகாம்கள், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி, எச்சில் மாதிரி ஆகியவற்றை அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் சேகரிக்கின்றனர். பின்னர், 5 முதல் 6 மணி நேரங்கள் கழித்துப் பரிசோதனை செய்ததாக செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வருகிறது. சிலருக்கு அதுவும் வருவதில்லை.
இந்தப் பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்துக்குள் வெளியிட அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டால் 3 முதல் 4 நாட்களுக்குப் பின்னர் அதன் முடிவுகள் தெரியவருகின்றன. முடிவுகள் தாமதமாவது தொற்று அறிகுறிகளுடன் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு, தொற்றின் தாக்கத்தைத் தீவிரப்படுத்துகிறது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் வெளியிட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டபோது,‘‘ மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் தினமும் சராசரியாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது வரை 13.90 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று அறிகுறியுடன் பரிசோதனை செய்தவர்கள், முடிவு வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றனர்.
24 மணி நேரத்துக்குள் முடிவு வெளியிடப்படும்
மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம்கூறும்போது, ‘‘மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் வெளியிட நான் உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக, தனியார் ஆய்வகங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகளைத் தாமதமின்றி, அதாவது, நேற்று எடுத்த மாதிரிக்கு இன்று இரவுக்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (மே 26) மாலை 6 மணி நிலவரப்படி இஎஸ்ஐ மருத்துவமனையில் 923 மாதிரிகள், தனியார் ஆய்வகங்களில் 881 மாதிரிகள், அரசு மருத்துவமனையில் 203 மாதிரிகள் என மொத்தம் 2007 மாதிரிகள் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. இந்த எண்ணிக்கை அனைத்துமே 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டவையாகும். 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட மாதிரிகள் எதுவும் முடிவுக்காகத் தற்போது நிலுவையில் இல்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT