Published : 26 May 2021 08:15 PM
Last Updated : 26 May 2021 08:15 PM
புதுச்சேரியில் பாஜகவுக்கு மேலும் இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இன்று கிடைத்ததால் அக்கட்சியின் பலம் 12 ஆனது. இதனால் என்.ஆர்.காங்கிரஸை விட கூடுதல் பலத்துடன் பாஜக தற்போது உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலைச் சந்தித்தது. 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 இடங்களிலும், 16 இடங்களில் போட்டியிட்ட என்.ஆர்.காங் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. போட்டியிட்ட 5 இடங்களிலும் அதிமுக தோற்றது. இதனால் 30 எம்எல்ஏக்கள் கொண்ட புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்ற என்.ஆர்.காங் - பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் அமைந்துள்ளது.
அதிக இடங்களைப் பெற்ற என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்றார். அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என அவர் உறுதி அளித்தாலும் இதுவரை இல்லாத துணை முதல்வர் பதவி உட்பட 3 அமைச்சர், சபாநாயகர் பதவிகளைக் கோரி வருவதால் அமைச்சரவை பதவியேற்க முடியவில்லை.
அதையடுத்து மத்திய அரசு மூலம் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து தனது பலத்தை 9 ஆக பாஜக உயர்த்தியது.
அத்துடன் புதுச்சேரியில் இதுவரை இல்லாத வகையில் இம்முறை தேர்தலில் 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். முதலாவதாக ஏனாமில் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் பாஜகவுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்தார். இதனால் பாஜகவின் பலம் பத்தாக உயர்ந்தது.
அதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து, அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திருபுவனை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற அங்காளன், இன்று பாஜகவுக்கு ஆதரவு தந்துள்ளார். இவர் ஏற்கெனவே அமைச்சராகவும் இருந்துள்ளார்.
அதேபோல் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து உழவர்கரை தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதால் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவசங்கரன் வென்று எம்எல்ஏவானார். அவரும் இன்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். தேர்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்கள் 6 பேருடன், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர் ஆதரவு என பாஜகவின் பலம் 12 ஆகியுள்ளது.
இதன் மூலம் கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸை விடக் கூடுதலாக 2 உறுப்பினர்களின் பலத்துடன் பாஜக உள்ளது. இந்த 12 எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பாஜக அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோருடன் நடைபெற்றது. அமைச்சரவை தொடர்பாக முக்கிய விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதித்துள்ளனர். அடுத்தகட்டமாக அமைச்சரவையில் அதிக இடங்களையும், முக்கியத் துறைகளையும் பெற பாஜக கூடுதலாக ரங்கசாமியை வலியுறுத்தவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் புதிய சிக்கல் ரங்கசாமிக்கு உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT