Published : 26 May 2021 07:54 PM
Last Updated : 26 May 2021 07:54 PM
கரோனா ஊரடங்கு காலத்தில் வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு உணவு வழங்க நிதி வழங்குமாறு தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் இன்று (மே 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் தற்போது நிலவும் கரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளுக்கு (பசுக்கள், நாய்கள், பூனைகள், குதிரைகள் போன்றவை) உணவு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் மூலம் உணவு வழங்கி, கால்நடைகளின் துன்பத்தைத் தணிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் எடுத்து வருகிறது.
தொடர்ச்சியான கரோனா ஊரடங்கு காலத்தில், விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக, நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டிட , தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்காக ஐசிஐசிஐ வங்கி, செனடாப் சாலை, சென்னை கிளையில், ஒரு தனி வங்கிக் கணக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும் இந்த உன்னத திட்டத்திற்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் தாராளமாக நிதியுதவி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வங்கி கணக்கு விவரங்கள்
1. கணக்கின் பெயர் : Tamil Nadu Animal Welfare Board CSR Funds
2. கணக்கு எண் : 000101236907
3. வங்கி பெயர் : ஐசிஐசிஐ வங்கி
4. கிளை : செனடாப் சாலை கிளை, சென்னை
5. ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு : ICIC0000001
6. எம்.ஐ.சி.ஆர் குறியீடு : 600229002
வங்கி வரைவோலை மற்றும் காசோலைகளை, 'Tamil Nadu Animal Welfare Board CSR Funds' என்ற பெயரில் எடுத்து, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் / இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571, அண்ணா சாலை, சென்னை-35. என்ற முகவரிக்கும் அனுப்பிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்கொடையாகப் பெறப்படும் தொகையானது தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தினால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் தேவைக்கேற்ப, வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்காக உணவுப் பண்டங்கள் வாங்கி விநியோகிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியவர்களுக்குத் தேவைப்படும் உணவு வழங்கும் அனுமதி அட்டை / (Feeder Pass) விலங்குகள் மீட்புப் பணி ஆர்வலர் அட்டை ஆகியவற்றைச் சம்பந்தப்பட்ட மாவட்ட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன.
சென்னை மாநகரில் உள்ள ஆர்வலர்கள் இயக்குநர், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் அலுவலகம், சென்னை-35 அவர்களுக்கு நேரில் அல்லது tnawb2019@gmail.com மின்னஞ்சலில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்த அனுமதி அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT