Last Updated : 26 May, 2021 06:26 PM

 

Published : 26 May 2021 06:26 PM
Last Updated : 26 May 2021 06:26 PM

வேலூரில் கூடுதலாக நடமாடும் காய்கறி வாகனம்; அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறி விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். | படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூரில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இம்மாதம் இறுதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், மருந்து, நேரக் கட்டுப்பாட்டுடன் செயல்படக்கூடிய உணவகம் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பழ வகைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவை நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 180-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வாகனங்கள் நடமாடும் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, காய்கறி, பழ வகைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுடன் நடமாடும் வாகனங்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 26) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலு (குடியாத்தம்), ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடமாடும் வாகனங்களைத் தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 700 வாகனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 250 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு கரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.பி.செல்வகுமார், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சங்கரன், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x