Published : 26 May 2021 04:29 PM
Last Updated : 26 May 2021 04:29 PM

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; சாதிப் பிரச்சினையாக்கும் முயற்சியைக் கைவிட்டு நீதி கிடைக்கப் போராடுவோம்: கமல்

சென்னை

சென்னை தனியார் பள்ளியில் ஆசிரியரே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில், குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக, சாதிப் பிரச்சினையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதாகவும் அறிவுச் சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு, பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த 'மகாநதி'. இன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக, சாதிப் பிரச்சினையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.''

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • M
    Muthusamy

    குறிப்பிட்ட இந்த பள்ளியின் ஆசிரியர் செய்த தவறான செயளுக்கு சரியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் ஆனால் சில டி வி சானெல்களில் இதை பற்றி தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்படுவதை பார்த்தால் இதற்க்கு பின்னால் கமல் சொல்வது போல ஜாதி அரசியல் இருப்பது போல் தெரிகிறது

  • T
    Thangamanik Kamalanathan

    யாராக இருந்தாலும், குற்றம் செய்தால் தண்டனை உறுதி.

 
x
News Hub
Icon