Last Updated : 26 May, 2021 02:56 PM

 

Published : 26 May 2021 02:56 PM
Last Updated : 26 May 2021 02:56 PM

புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமையை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று வருவோருக்கு தன்னார்வலர் மூலம் மதிய உணவு வழங்கும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கணன். உடன் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு

 காரைக்கால்

புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமையை மத்திய அரசு தொடர்ந்து கொடுக்க மறுத்து வருவதாக, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிகப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோருக்கு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் சார்பில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆர்.கமலக்கண்ணன் இன்று(மே 26) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆ.கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, "கரோனா தொடர்பான அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பல தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் பல்வேறு உதவிகளையும், ஒத்துழைப்பையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் எங்களது வேண்டுகோளை ஏற்று சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராமாமிர்தம் என்ற தன்னார்வலர், இந்த மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சைப் பெறுவோருக்கு 28 நாட்களுக்கு மதிய உணவு அளிக்க முன்வந்துள்ளார். அவர் சார்பில் இப்பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் வகையில் முந்தைய முதல்வர் நாராயணசாமி தலைமயிலான அரசு சிறப்பாக செயல்பட்டது. அதே போன்ற வகையில் தற்போதைய அரசும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துக்களையும் கேட்டு கரோனா தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் எப்படி நடக்குமோ அது போன்ற ஒரு நடைமுறை தற்போது புதுச்சேரியில் நடப்பது போன்ற தோற்றம் இருக்கிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிகளுக்குள்ள உரிமை, அதிகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து கொடுக்க மறுக்கிறது அல்லது கொடுப்பது போன்று பாவனை செய்கிறது. இது தவறானது. ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழுமையாக செயல்படுவதற்கான அனுமதியும், அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x