Published : 26 May 2021 12:39 PM
Last Updated : 26 May 2021 12:39 PM

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: செயல்பாட்டுக்குக் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி தேவைக்காக செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைப் பயன்படுத்துவது குறித்து நேற்று ஆய்வு செய்த நிலையில், இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை தொற்றுப் பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. இதில் தமிழகமும் தப்பவில்லை. இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை பதிவில் அதிக எண்ணிக்கை பதிவாக முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. கரோனா அலை பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, தடுப்பூசிதான் சிறந்த தீர்வு என உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இரண்டு வகையான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. தற்போது தமிழகத்தில் 70 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 13 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர். ஆனால், தொற்றுப் பரவலின் தீவிரம், கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போடவேண்டிய தேவை , போதிய தடுப்பூசி தயாரிப்பதில் சுணக்கம் காரணமாக தொற்றுப் பரவல் அதிகரிப்பு, உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கியும் அதைச் செயல்படுத்த முடியாத அளவுக்குப் பற்றாக்குறை உள்ளது. தடுப்பூசி தேவைக்காக தமிழகம் 5 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிலும் தற்போது வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் நிபந்தனையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு தடுப்பூசிகளைத் தயாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதைத் தமிழகம் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று தடுப்பூசி தயாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி மையத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர், “கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும்.

மேலும், மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடைமுறைகள், மத்திய அரசிடம் எவ்வாறு கோரிக்கை வைப்பது, நிதி ஆதாரம், தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலக்கூறுகளைப் பெறுவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x