Published : 26 May 2021 11:56 AM
Last Updated : 26 May 2021 11:56 AM
விற்பனையாளர்கள் தாமதமாக வருவதால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குப் பொதுமக்கள் கடை முன் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 592 ரேஷன் கடைகளும் 3.15 லட்சம் ரேஷன் அட்டைகளும் உள்ளன. இம்மாதம் கரோனா முதற்கட்ட நிவாரண நிதிக்கு டோக்கன் வழங்கும் பணிகள், நிவாரண நிதி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இம்மாதம் ரேஷனில் வாங்கவேண்டிய சர்க்கரை, பருப்பு, எண்ணெய், அரிசி, கோதுமை ஆகிய பொருட்களைப் பொதுமக்கள் வாங்கவில்லை.
முழு ஊரடங்கு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் ரேஷன் கடைகளும் மூட்டப்பட்டன. இதனால் மக்கள் இம்மாத ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் நேற்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கரூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் 2வது நாளாக இன்று (மே 26ம் தேதி) காலை 8 மணிக்கு முன்பே ரேஷன் கடைகள் முன் குழுமி, காத்திருந்தனர். ஆனால் பெரும்பாலான கடைகளின் விற்பனையாளர்கள் 8.30 மணிக்கு மேலேயே கடையைத் திறக்க வந்தனர். விற்பனையாளர் வந்தபின் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சமூக இடைவெளியுடன், வரிசை அமைத்து நீண்ட வரிசையில் காத்து நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கரூர் நகராட்சி கருப்பகவுண்டன்புதூர் ரேஷன் கடை முன் 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று (மே 26ம் தேதி) காலை 8 மணிக்கு முன்பே கடை முன் காத்திருந்தனர். 8 மணிக்கு வந்த ஒரு சிலர் சிறிது நேரம் காத்திருந்து பார்த்துவிட்டும், மேலும் சிலர் கடை திறக்காததாலும் திரும்பி விட்டனர். விற்பனையாளர் காலை 8.40க்குத் தான் கடையைத் திறந்தார். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, ’’கடை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை என கூறினாலும் யாரும் சரியாக 12 மணிக்குக் கடையை மூடுவதில்லை. 12 மணி வரை வரிசையில் நிற்பவர்களுக்கு எவ்வளவு நேரமானாலும் பொருட்களை வழங்கிவிட்டுத்தான் செல்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT