Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

மருத்துவக் காப்பீடு அட்டை வைத்திருந்தும் பயனில்லை; ‘கரோனா’ சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்: தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

கோப்புப் படம்

மதுரை

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவிய ஆரம்ப காலத்தில் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ‘கரோனா’ வார்டுகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகள் அதிகரித்ததால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் சிகிச்சை கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. அதனால், தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்கலாம் என தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசே கட்டணமும் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தனர்.

அதேபோல், இந்த ஆண்டு கரோனா 2-வது அலையிலும் தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ரூ.3 லட்சம் முதல் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். நோயாளிகள், அவசர மருத்துவச் சிகிச்சைக்காக தனியாகவும், தங்கள் நிறுவனங்கள் சார்பிலும் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை தனியார் மருத்துவமனைகள் தற்போது ஏற்பதில்லை.

காப்பீட்டை பயன்படுத்துவதில் சிக்கல்

பணம் கட்டி சிகிச்சை பெற வந்தால் மட்டுமே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கின்றனர். அதற்கு அவர்கள், காப்பீடு நிறுவனத்துக்கு செலவின விவரங்களை அனுப்பி பணத்தைப் பெற தேவையான ஊழியர்கள் இல்லை என்றும், அதற்கான கால அவகாசமும் இதுபோன்ற பேரிடர் காலத்தில் இல்லை என்றும் காரணம் கூறுகின்றனர்.

அதனால், நடுத்தர மக்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வைத்திருந்தும் அவற்றை பயன்படுத்தி கரோனா சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வசதி படைத்தவர்களும், கையில் இருக்கும் பணத்தையும், சேமிப்பையும், சொத்துகளையும் விற்று செலவு செய்யத் தயாராகும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே, தற்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.

நோயாளிகளை தேர்வு செய்யக் குழு

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் அனுமதிப்பதில்லை. வயது முதிர்ந்தவர்கள், நோய் முற்றிய நிலையில் வருவோரைச் சேர்த்து அவர்கள் இறந்துவிட்டால் மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதி, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை தேர்வு செய்வதற்கே தனிக் குழுவை நியமித்துள்ளனர்.

அவர்கள் நோயாளிகளைப் பரிசோதனை செய்து ஒப்புதல் வழங்கினாலும், பணம் செலுத்தி சிகிச்சை பெறத் தயாராக இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். மருத்துவக் காப்பீட்டு அட்டைகளைக் கொண்டு சென்றால் படுக்கை இல்லை என்று கூறி சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்து விடுகின்றனர்.

அப்படியே ஒருவழியாக அனுமதி வாழங்கினாலும், அவர்கள் சிகிச்சை கட்டணத்துக்கு உரிய ரசீது வழங்குவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: கரோனா நோயைப் பொறுத்தவரை அனைத்து நோய்களுக்கும் விலை உயர்ந்தமருந்துகளைப் பயன்படுத்துவது கிடையாது. ஆக்சிஜனை அனைத்து நோயாளிகளுக்கும் பிரித்துக் கொடுக்க குறைவாகத்தான் செலவாகும்.

நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆக்சிஜன், ஸ்டீராய்டு மருந்துகள், சில நோயாளிகளுக்கு இன்சுலின், ரெம்டெசிவிர் வழங்குவர். நோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடுவோருக்கு மட்டுமே டோசிலிசுமேப் (tocilizumab) மருந்து வழங்கப்படுகிறது. இம்மருந்து மட்டுமே விலை உயர்ந்ததாக ரூ.40 ஆயிரம் ஆகிறது. ரெம்டெசிவிர் மருந்து, ரூ.800 முதல் ரூ.1000 வரைதான் ஆகிறது.

இரட்டிப்பு அறை வாடகை, மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம், அவர்களுக்கான பிபி கிட், முகக்கவசம், கையுறை, ஆக்சிஜன், மருத்துவச் சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் உணவு ஆகியவற்றை சேர்த்தாலும் சிறு, குறு நகரங்களில் ரூ.2 லட்சம் வரையும், நடுத்தர நகரங்களில் ரூ.3 லட்சமும், பெருநகரங்களில் ரூ.5 லட்சம் வரை ஒரு நோயாளிக்கு செலவாகலாம்.

ஒரு சில நோயாளிகளுக்கு மற்ற துணை நோய்கள் இருந்தால் விதிவிலக்காக ரூ.6 லட்சம் வரை ஆகலாம். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் அனைத்து நோயாளிகளுக்குமே இவர்கள், அடாவடியாக லட்சக்கணக்கான ரூபாய் வசூலிப்பது தவறுதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எழுத்து மூலம் புகார் வேண்டும்

இதுதொடர்பாக மதுரை மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘‘யாராவது எழுத்து மூலம் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், யாருமே அதைச் செய்வதில்லை. புகார் இல்லாமல் மேலோட்டமாக தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது’’ என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, கரோனா காலத்தில் வேலையின்றி வருவாய் இழந்து, நோய்த் தொற்று பாதித்து சிகிச்சைக்கு வரும் அப்பாவி மக்களிடம் அநியாயமாக லட்சக்கணக்கில் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளைத் தீவிரமாகக் கண்காணித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x