Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM
தினசரி கரோனா தொற்று பாதிப்பு உறுதியாவதில் சென்னையை கோவை நெருங்கி வரும் நிலையில், அதற்கானகாரணங்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விவரித்துள்ளனர்.
சென்னையில் நேற்று 4,041 பேருக்கு தொற்று உறுதியானநிலையில், கோவையில் ஒருநாளையபாதிப்பு 3,632-ஆக இருந்தது. கிட்டத்தட்ட சென்னை அளவுக்கு கோவையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இருப்பதற்கான காரணங் கள் குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
கரோனா முதல் அலையைவிட, இரண்டாம் அலையில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்வீரியம் அதிகமாக உள்ளது. எண்ணிக்கை அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாகும். கோவையில், அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, 19 தனியார் ஆய்வகங்களில் மாதிரிகள் பரிசோதிக்கப் படுகின்றன.
தினந்தோறும் சராசரியாக 12 ஆயிரம்பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. பரிசோதனை மேற்கொள் பவர்களில் 30 சதவீதத்துக்கும் மேல் தொற்று உறுதியாகிறது.
புள்ளிவிவரங்களில் இடைவெளி
கோவையில் தினசரி சராசரி பாதிப்பு3,500 என்ற அளவில் உள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், முடிவுகளை உடனடியாக ஆய்வகங்களில் பதிவேற் றம் செய்வதில்லை. இதனால், அன்றைய எண்ணிக்கையை அன்றைக்கே அளிக்க முடிவதில்லை. எனவே, அவ்வப்போது ஆன்லைனில் பதிவு செய்யுமாறு ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். களப்பணியை காலையில் தொடங்க வேண்டும் என்பதால், மாவட்ட அளவில் காலை 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணிவரை கிடைக்கும் பரிசோதனை முடிவுகளை ஒருநாள் கணக்கில் வைத்துள்ளோம்.
ஆனால், மாநிலஅளவில் வெளியிடப்படும் ஊடக அறிக்கையில், நண்பகல் 12 மணி முதல் மறுநாள் நண்பகல் 12 மணி வரையிலான எண்ணிக்கையை கணக்கில் கொள்கின்றனர். 12 மணிக்குமேல் கிடைக்கும் தகவல்கள் அடுத்தநாள் கணக்கில் சேர்ந்துவிடும். இதனால்தான், தினசரி எண்ணிக்கையில் இடைவெளி தொடர்ந்து வருகிறது. நண்பகல் 12 மணிக்கு அவர்களுக்கு அனைத்து தகவல்களும் கிடைத்தால்தான், ஊடக அறிக்கையை தொகுத்து மாலையில் வெளியிட முடியும்.
தேடிவரும் வெளிமாவட்ட நோயாளிகள்
கோவையில் தினசரி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் சேர்க்கப்படுகிறது. ஆக்சிஜன் படுக்கை,தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதற்காகவே அதிக அளவில்கோவையைத் தேடி வருகின்றனர். கோவைக்கு தேனியில் இருந்தெல்லாம் நோயாளிகள் வருகின்றனர். ஏனெனில், சுற்றியுள்ள மாவட்டங்களைவிட கோவையில் மருத்துவமனை களின் எண்ணிக்கை அதிகம்.
தற்போதுகோவையில் 70 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவைக்கு வந்தால்எப்படியும் ஒரு மருத்துவமனையில் இடம் கிடைத்துவிடும் என்றநம்பிக்கையில் நோயாளிகளை ஆம்பு லன்ஸ்களில் அழைத்துவருகின்றனர். நீலகிரியைச் சேர்ந்தவர்களுக்கு வேறு வாய்ப்புகளே இல்லை. அவர்கள் சிகிச்சைக்காக இங்கு வந்துதான் ஆக வேண்டும். அதேபோல, திருப்பூர், ஈரோட்டில் இருந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் இருந்துகூட இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
பரிசோதனைக்கேற்ப அதிகரிப்பு
கரோனா பரிசோதனை ஆய்வகங் கள், தொற்று உறுதியானவர்களின் முடிவை ஆன்லைனில் கட்டாயம் பதிவுசெய்தே ஆக வேண்டும். அதில், எந்த மாவட்டம் என்று குறிப்பிட வேண்டும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஒருவர் பரிசோதனை செய்துகொள்ளலாம். பரிசோதனை செய்யும் இடத்தில் கோவை முகவரியை அளித்தால், அவரின் பரிசோதனை முடிவு கோவை கணக்கில்தான் சேர்க்கப்படும். கோவை தொழில்நகரம் என்பதால் தொழில்ரீதியாக வந்து தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள், பரிசோ தனையின்போது முகவரியில் வெறும்கோவை என்று அளிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் கண்டறிந்து பிரிப்பது சிரமமான காரியம்.
திருப்பூரில் பரிசோதனை செய்துகொண்டால் முடிவு கிடைக்க தாமதமாகும் என்று கருதி, இங்கு பரிசோதனைக்காக வருபவர்களும் உண்டு.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும், பரிசோதனைக்கு ஏற்பவேதொற்று உறுதியாகும் எண்ணிக்கையும் இருக்கும். அந்தவகையில், கோவை மாநகராட்சியில் தினந்தோறும் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றனர். ஒரு மண்டலத்துக்கு தினமும்1,000 பேர் என இலக்கு நிர்ணயித்து, 4 ஆயிரம் பேர் வரை பரிசோதிக்கின்றனர். இதனால், கோவையில் ஒருவருக்கு அறிகுறி இருந்தால் எளிதாக பரிசோதித்துக்கொள்ள முடிகிறது. ஆனால், திருப்பூரில் ஒருவர் பரிசோதனை செய்ய வேண்டுமெனில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை தேடிப்போக வேண்டும்.
குழுவாக அதிகம்பேர் பாதிப்பு
கோவையில் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் அதிகம் இருப்பதால் தொழிலாளர்களுக்கிடையே தொற்று பரவுவது ஊரடங்கு தொடங்கும்வரை அதிகமாக இருந்தது. ஊரடங்குக்கு பிறகு அந்த எண்ணிக்கைகுறைந்துள்ளது.இவையெல்லாம் தான் கோவையில் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகஇருக்கக் காரணங்கள்.
கோவையை தங்கள் வசிப்பிடமாகக் கொண்டிருப் பவர்களின் எண்ணிக்கையையும், வெளிமாவட்ட ங்களில் இருந்து வந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை யையும் தனியே பிரித்துப் பார்த்தால், கோவை யின் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT