Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலுள்ள பல்வேறு கிராமங்களில் ஆலு குரும்பா பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். தற்போது, கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே உள்ள புதுக்காடு பழங்குடியின கிராமத்தில் கிருமி நாசினி மற்றும் சோப்புக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும்பொருட்களை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதிகளிலுள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசக் காய்களைசேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்துகின்றனர்.
இவற்றை சமவெளிப் பகுதிகளிலுள்ள சில தனியார் சோப்புநிறுவனங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். கை கழுவுவதற்கும், கிருமி நாசினிக்கு பதிலாகவும் இக்காய்களை மக்கள் பயன்படுத்திவருகின்றனர். பள்ளிகள் செயல்படாததால், விடுமுறைக் காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க இதுபோன்ற பொருட்களை சேகரிக்கும் பணியில் பழங்குடியின குழந்தைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தொல் பழங்குடியின ஆய்வாளர் திருமூர்த்தி கூறும்போது, ‘‘வன உரிமைச் சட்டத்தின் படி வனப் பொருட்களைபழங்குடியின மக்கள் எடுத்து விற்று, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளதால்,இதுபோன்ற சிறு வன மகசூல் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சோப்புக்காய் என அழைக்கப்படும் பூசக்காயைபயன்படுத்தினால், சோப்பு பயன்படுத்துவதைப்போல நுரை வரும். தொற்று பரவும் சூழலில் சோப்பும், கிருமி நாசினியும் அடிக்கடி வாங்க முடியாது,’’ என்றார்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் கூறும்போது ‘‘வனங்களில் கிடைக்கும் பூசக்காயை நசுக்கினால், அதிலுள்ள வேதிபொருள் நுரைபோல வெளியேறும். அது, கிருமிகளை அழிக்கக்கூடியது. சோப்பு நிறுவனங்களே இந்த காயை,தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT