Published : 25 May 2021 07:55 PM
Last Updated : 25 May 2021 07:55 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தொற்று அறிகுறியுள்ளவர்கள் எனக் கருதப்படும் நபர்கள் குறித்த தகவல்களை மாநகர நல அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் தெரியவருகிறது.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணையின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இது தொடர்பாக, தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களைப் பெற மாநகராட்சியின் சார்பில் பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்குத் தெரிவிக்கத் தவறினால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51-ன் படி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT