Published : 25 May 2021 05:54 PM
Last Updated : 25 May 2021 05:54 PM
மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கட்டுமான பொருட்களைக் குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (SUO-MOTU) வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுகுறித்து மத்திய அரசு, தமிழக, கர்நாடக அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் விண்ணப்பித்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையைக் கட்டப்போவதாக குமாரசாமி முதல்வராக இருந்த காலத்திலிருந்து கர்நாடக அரசு பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது. தற்போது மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். மேகதாது அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றை நம்பியுள்ள பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம்தான் விவசாயிகளின் மத்தியில் உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் யாராலும் அணை கட்ட முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளைக் காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன.
கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்பதுதான் மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் எந்த கோரிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதே அந்த விதி.
ஆனாலும், மத்திய அரசும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள் இதை மதிக்காமல் அனுமதி வழங்குவார்கள் என ஒரு விமர்சனமும் தமிழக எதிர்கட்சித் தலைவர்களால் வைக்கப்பட்டது.
ஆனால், 2018-ம் ஆண்டு அப்போதைய குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.5,912 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கோரும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தைக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுப்பி வைத்தது.
ஒவ்வொரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடும் போதும், அதில் கர்நாடக அரசின் கோரிக்கை குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும், தமிழக அரசின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஏதேனும் ஒரு கூட்டத்தில், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசின் கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்தின் நிலை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அச்சத்தை சில ஆண்டுகளுக்கு முன் வெளிப்படுத்தியிருந்தார்.
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
ஆனால், சமீபகாலமாக இதுகுறித்து எவ்வித கவலையும் இன்றி கர்நாடக அரசு தனது முயற்சியில் இறங்கி வருகிறது. இதுகுறித்து ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்று வெளியானது. பெங்களூருவின் குடிநீர் தேவை மற்றும் மின் உற்பத்திக்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கட்டுமான பொருட்களைக் குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது (SUO-MOTU) தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்.
வனப் பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாமல் அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு என பத்திரிகையில் செய்தி வெளியானதை அடுத்து சூமோட்டோ வழக்கைக் கையிலெடுத்துள்ளது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை அமைத்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக, கர்நாடக அரசுகளும் பதிலளிக்க உத்தரவிட்டது.
மேலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இக்குழு ஜூலை 5ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT