Published : 25 May 2021 04:03 PM
Last Updated : 25 May 2021 04:03 PM
திருநெல்வேலி மாநகருக்கு அடுத்ததாக வள்ளியூர், ராதாபுரம் வட்டாரங்களில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு வீடுகள்தோறும் காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் முடங்கியிருக்கிறார்கள்.
இதனால் அரசு மற்றும் மருத்துவத்துறைகள் இந்த வட்டாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே 800 என்ற எண்ணிக்கையில் இருந்து வருகிறது. கரோனா 2-வது அலையின் தொடக்கத்தில் இருந்தே திருநெல்வேலி மாநகரில் அதிகபட்ச பாதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது கிராமப்புறங்களில் தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
திருநெல்வேலிக்கு இணையாக வள்ளியூர், ராதாபுரம் வட்டாரங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த வட்டாரங்களில் இருந்து மகாராஷ்டிரம், சென்னை போன்ற வெளியிடங்களில் பிழைப்புக்காகவும், தொழில் நிமித்தமும் ஏராளமானோர் இடம்பெயர்ந்திருந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தற்போது தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். ராதாபுரம் வட்டாரத்தில் கூடங்குளத்தில் 3,4,5,6-வது அணுஉலைகள் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பணிகளில் பெரும்பாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோல் மகேந்திரகிரியிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்தில் நடைபெறும் பணிகளிலும் ஏராளமான வெளிமாநிலத்தவர் பணிபுரிகிறார்கள்.
இவர்களில் பலருக்கு கரோனா தொற்று கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. இத்தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு சென்று திரும்பிவருவதும் தொடர்ந்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்த வட்டாரங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மரணங்களும் அதிகரித்துள்ளது.
இந்த வட்டாரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானோர், உடல்நிலை மோசமாகும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வரும் தொலைவைவிட ஆசாரிப்பள்ளத்துக்கு செல்வது எளிது என்பதால் இங்குள்ளவர்கள் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைக்கு அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
தொற்று அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்த வட்டாரங்களில் கிராமங்களில் வீடுகள்தோறும் காய்ச்சல், உடல் வலியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் சுயமருத்துவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
காய்ச்சல் பாதிப்பு குறித்து வெளியே சொல்லாமல் ஆயிரக்கணக்கானோர் தற்போது வீடுகளில் முடங்கியிருப்பதாக தெரிகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. எனவே இந்த வட்டாரங்களில் காய்ச்சல் முகாம்களையும், கரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல் கரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த கூடங்குளம் பகுதியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனையை அமைக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT