Last Updated : 25 May, 2021 02:49 PM

3  

Published : 25 May 2021 02:49 PM
Last Updated : 25 May 2021 02:49 PM

பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் பதவி ஏற்க எதிர்ப்பு; உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு கடிதம்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்க ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில், பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் மூவரும் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 9-ம் தேதி தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.

தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காமல் நிலுவையில் இருந்ததால், சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதியன்று புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்வரின் பரிந்துரையின்பேரில் எம்எல்ஏ லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநர் தமிழிசை நியமித்ததாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், நாளை (மே 26) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்கு காலை 9 முதல் 10 மணிக்குள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதையடுத்து, காலை 10 முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பை கரோனா காலத்தில் நடத்துவது தொடர்பாக, சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி மற்றும் அதிகாரிகளுடன் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆலோசித்தார்.

கரோனா காலமாக இருப்பதால் சபாநாயகர் அறையில் தனிமனித இடைவெளியுடன் ஒவ்வொரு பத்து பேராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாம் என முடிவு எடுத்தனர். சட்டப்பேரவை உறுப்பினருக்கான உறுதிமொழி ஏற்று மக்களால் தேர்வான எம்எல்ஏக்களும், நியமன எம்எல்ஏக்களும் பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு எடுத்திருந்தனர்.

நியமன எம்எல்ஏக்கள் பதவி ஏற்பதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி கடிதம்

பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் தற்காலிக சபாநாயகருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"புதுச்சேரி சட்டப்பேரவையின் நியமன உறுப்பினர்களாக வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். முதல்வர் மட்டுமே பதவி ஏற்ற நிலையில், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்காத நிலையில் மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டது தவறானது.

மேலும், மூவரும் பாஜகவை சேர்ந்தவர்கள். நியமன எம்எல்ஏக்கள் பதவியை கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில், நியமன எம்எல்ஏக்கள் நியமனம் சட்டத்திற்குப் புறப்பானது. அவர்கள் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரையில், மூன்று நியமன எம்எல்ஏக்களின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இவ்வழக்கு கடந்த 20.05.2021 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பிப்பதற்காக நாள் குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இச்சூழலில், உயர் நீதிமன்றத்தில் மூன்று நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது, அவர்களுக்குப் பதவியேற்பு செய்து வைப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். மேலும், இவ்வழக்கு விசாரணைக்கும், இறுதித் தீர்ப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

எனவே, உயர் நீதிமன்ற வழக்கு முடிவு தெரியும் வரையில் மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கும் பதவியேற்பு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x