Published : 25 May 2021 01:46 PM
Last Updated : 25 May 2021 01:46 PM

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்களையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்: அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு

சென்னை

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்களை கரோனா சிகிச்சையில் அனுமதிக்க மறுக்கக் கூடாது. சிகிச்சைக்கு அனுமதித்து குடும்பத்தில் யாராவது ஒருவர் மூலமாக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியும். மற்றவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. இந்நிலையில், அவ்வாறு அட்டை இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இதே பிரச்சினை குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்துள்ளார்.

திண்டுக்கல்லில் கரோனா சிகிச்சை, ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

“முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் முதல்வர் அறிவித்ததற்கு இணங்க இனிமேல் கரோனா சிகிச்சைக்காக யார் வந்தாலும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மருத்துவ வசதி, தனியார் மருத்துவமனையில் வழங்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்களிடம் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லை என்றால் சிரமப்படத் தேவையில்லை.

அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, குடும்பத்தில் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகினால் அவர்கள் காப்பீட்டு அட்டை எடுக்காமல் இருக்கும்பட்சத்தில் புதிய காப்பீடு அட்டை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. ஒருவேளை கூடுதலாகத் தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்யவும் அரசு தயாராக உள்ளது”.

இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x