Published : 25 May 2021 10:33 AM
Last Updated : 25 May 2021 10:33 AM
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் 18 வயது முதல் 45 வயது வரையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:
கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது, 18 வயது முதல் 45 வயது வரையுள்ள நபர்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. முதற்கட்டமாக அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளும் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இதற்காக அமைக்கப்படவுள்ள தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட உள்ளது.
அதன்படி நாள்தோறும் செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசு பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள்.
பள்ளி, கல்லூரி ஆசியர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் மாநில பிற துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோரும், கோவிட் பாதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சேவை புரியும் தன்னார்வலர்கள் ஆகியோரும் முன்னுரிமை அடிப்படையில் தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கோவிட் தடுப்பூசிகளை பெற்று பயனடையலாம்.
மேற்குறிப்பிட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களின் சார்பில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் அல்லது மாநகராட்சி தலைமையிடத்தில் துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) அவர்களின் அலுவலகத்தில் அணுகி விவரங்களை வழங்கினால் அல்லது மாநகராட்சியின் https://forms.gle/Bb5VGvRxUXuvmEvi8 என்ற இணையதள இணைப்பின் வாயிலாக அல்லது 94983 46494 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால் அவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும்.
பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் நபர்களுக்கு ஊரடங்கு காலத்தில் அவர்களின் இருப்பிடத்திலிருந்து தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல மாநகராட்சியின் சார்பில் தடையில்லா சான்று வழங்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் போது மாநகராட்சியின் தடையில்லா சான்று, நிறுவனங்களின் அங்கீகார அட்டை மற்றும் நிறுவன சீருடை அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT