Published : 24 May 2021 09:44 PM
Last Updated : 24 May 2021 09:44 PM

தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்யக்கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக அரசு கடிதம்

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்படவுள்ள தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன் 2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்புவாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நெடிய ஜனநாயகப் போராட்டக் களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ்ப் பண்பாட்டின் மதிப்புகளைக் கொண்டதாக இல்லை.

பெருமைமிகு தமிழ்ப் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிப்பரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது என கருத முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தாவை தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது.

இந்தத் தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.
மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவது கடினமாகும்.

இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என ஏற்கெனவே வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x