Published : 24 May 2021 08:21 PM
Last Updated : 24 May 2021 08:21 PM
கரோனா நிவாரணத் தொகை பெறாதவர்கள் பணத்தைப் பெறவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் ரேஷன் கடைக்கு நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியுடன், முகக் கவசத்துடன் வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:
“ *கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு எவ்விதமான தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* இச்சூழ்நிலையில், பொதுமக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய, இன்றியமையாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டப் பண்டங்களைத் தொடர்ந்து பெறும் பொருட்டு கோவிட்-19 பெருந்தொற்று நிவாரணத் தொகை ரூ.2000/-ஐ, இதுவரை பெறாதவர்கள் நியாய விலைக் கடைகளிலிருந்து பெறும் வண்ணம் மே 25 முதல் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு சூழ்நிலையிலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தொடர்ந்து காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை விநியோகம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
* அவ்வகையில், உணவுத்துறைப் பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட அத்தியாவசியப் பணிகளுக்காகப் பயணிக்க நேரும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் நிவாரணத் தொகை தடையின்றி வழங்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள இவ்வுத்தரவினை சீரிய முறையில் எவ்வித தொற்று பாதிப்புமின்றிச் செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
* பொதுமக்களும் இத்திட்டத்தினை உரிய பாதுகாப்பு முறையில் பயன்படுத்தி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிலையான வழிகாட்டி நடைமுறையினைப் பின்பற்றி அவர்களுக்கு உரிய இன்றியமையாப் பண்டங்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* பொதுமக்களின் நலன் கருதி இத்தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், நியாய விலைக் கடைக்குச் செல்லும்போது அதற்குரிய ஆதாரமாகக் குடும்ப அட்டையுடன் தவறாது செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT